மெரினாவில் அலையில் சிக்கிய அசாம் கால்பந்து வீரர்கள் மூவர் மீட்பு
சென்னை:மெரினாவில், கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட அசாம் மாநில கால்பந்து வீரர்கள் உட்பட நான்கு பேர் மீட்கப்பட்டனர். பெரம்பூரில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக, அசாம் மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம், 16 பேர் கொண்ட குழுவினர் சென்னை வந்தனர். போட்டி முடிந்தபின், பொழுதை கழிப்பதற்காக மெரினா கடற்கரைக்கு வந்தவர்களில், எட்டு பேர் உழைப்பாளர் சிலை பின்புறம் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய அலையில் சிக்கி மூன்று பேர் இழுத்துச் செல்லப்பட்டனர். பொதுமக்கள் மற்றும் போலீசார், அலையில் இழுத்துச் செல்லப்பட்ட, 16 - 17 வயதிற்கு உட்பட்ட மூன்று பேரை மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்லுாரி மாணவர் அதேபோல, கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட சவிதா பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த 17 வயது மாணவனை போலீசார் மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நான்கு மாணவர்களுக்கும் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.