தொழிலாளியை வெட்டிய மூன்று ரவுடிகள் கைது
புதுவண்ணாரப்பேட்டை:கூலி தொழிலாளியை கத்தியால் வெட்டிய, மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்த டேவிட், 28, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே நின்றுக் கொண்டிருந்தார். அங்கு வந்த நான்கு பேர், டேவிட்டிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தனர். டேவிட்டை கத்தியால் வெட்டிவிட்டு, அவரிடமிருந்த, 850 ரூபாய் பணத்தை பறித்து தப்பினர். பலத்த காயமடைந்த டேவிட், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன், 31, அவரது தம்பி ராஜி என்ற மஸ்தான், 27, நரேஷ்குமார், 20, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். விசாரணையில், லோகநாதன் மீது, இரு கொலை முயற்சி உள்ளிட்ட 23 வழக்குகள்; ராஜி மீது ஒரு கொலை வழக்கு, நரேஷ் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.