டி.என்.சி.ஏ., மகளிர் கிரிக்கெட் கோவை அணி சாம்பியன்
சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையே மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. மற்ற மாவட்டங்களில் லீக் முறையில் நடந்த போட்டிகள், சென்னையில் நாக் அவுட் முறையில் நடந்தன.சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில், சேலம் அணி, 27.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 60 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த கோவை அணி, 23.1 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 61 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.மற்றொரு அரையிறுதியில், காஞ்சிபுரம் அணி, 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 186 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 48.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 187 ரன்களை அடித்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நேற்று நடந்த இறுதிப் போட்டியில், திருப்பூர் மற்றும் கோவை அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த, திருப்பூர் அணி, 36.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 72 ரன்களில் சுருண்டது. அடுத்து பேட்டிங் செய்த, கோவை அணி, 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்கூட இழக்காமல் 73 ரன்களை அடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையை வென்றது. ***