சுகாதார சீர்கேட்டில் கோயம்பேடு சந்தை நிர்வாக குழுவிற்கு வியாபாரிகள் கடிதம்
சென்னை, சென்னை கோயம்பேட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள் விற்பனைக்கு தனித்தனியாக சந்தைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் நடந்து வருகிறது.சந்தையில் குப்பை கழிவுகளை அகற்றும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை தினமும் டன் கணக்கில் குப்பை அகற்றப்படுகிறது.மார்க்கெட்டில் வீணாகும் பொருட்கள், கடைகளுக்கு முன்னே குவிக்கப்படுகிறது. இவற்றை ஒப்பந்த நிறுவனம் அள்ளுவதற்கு முன்பாக, வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் காரணமாக, அவை சகதியாக மாறுகிறது. மேலும், மழைக்காலங்களில் கடை தெருக்களில் கழிவுநீருடன் தேங்குகிறது. இவற்றை விரைந்து வெளியேற்றுவதற்கு போதுமான மழைநீர் கால்வாய் கட்டமைப்புகளும் இல்லை.இதனால், மார்க்கெட்டில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில், விற்பனைக்கு வரும் காய்கறிகள், பழங்கள் மீது, சேறும், சகதியும் படுகிறது. இதனால், அவற்றின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மார்க்கெட்டை சுகாதாரமாக பராமரிக்க வலியுறுத்தி, அங்காடி நிர்வாக குழுவிற்கு வியாபாரிகள் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து கோயம்பேடு சந்தை சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலர் முத்து அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கோயம்பேடு சந்தையில் நாளுக்கு நாள் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. கழிவுநீர், மழைநீர் கலந்து வருவதால், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிப்பறைகளில், அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் நிரம்பி வழிந்து முகம் சுளிக்க வைக்கிறது. வியாபாரம் செய்யும் இடத்திலும் கழிவுநீர் தேங்கியுள்ளது.சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அடிக்கடி மின்சார துண்டிப்பு ஏற்படுகிறது. மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மார்க்கெட்டை சீரமைத்து, சுகாதாரமாக பராமரிக்க அங்காடி நிர்வாக அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.