திருநங்கையர் புத்தொழில் துவங்க விரைவில் நிதி: உதயநிதி
சென்னை:''மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் புத்தொழில் துவங்க தேவையான நிதியை, முதல்வர் விரைவில் ஒதுக்குவார்,'' என, துணை முதல்வர் உயதநிதி கூறினார்.புத்தொழில் புரிவோரை ஊக்குவிக்கும் வகையில், அரசின், 'ஸ்டார்ட் - அப் தமிழ்நாடு' சார்பில், 'ஸ்டார்ட் அப் சென்னை - செய்க புதுமை' என்ற நிகழ்ச்சி, சென்னை, தரமணி ஐ.ஐ.டி.எம்., வளாகத்தில் நேற்று நடந்தது. 1 டிரில்லியன் டாலர்
தொழில் நேயம் - டிசைன் ஸ்டூடியோ ஆகியவற்றை துவக்கி வைத்த, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:தமிழகம் முழுதும், பரவலான தொழில் வளர்ச்சி என்பதுதான் அரசின் லட்சியம். ஓசூர், சேலம், தஞ்சை, கடலுார், திருச்சி, கோவை ஆகிய இடங்களில், 'ஸ்டார்ட் அப்' ஒருங்கிணைப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்கள் வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. துபாயில், 19 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.வரும் 2030ல், தமிழகத்தை ௧ டிரில்லியன் டாலர் பொருளாதாரம் உடைய மாநிலமாக உருவாக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்துறை, புத்தொழில் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியம். கடந்த ஆண்டு, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து, தொழில் முனைவோர் உருவாக்க, 30 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஒதுக்கினார். தற்போது, 50 கோடி ரூபாயாக முதல்வர் உயர்த்த உள்ளார். மேலும், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தொழில் நிறுவனம் துவங்குவதற்கும், முதல்வர் விரைவில் நிதி ஒதுக்க உள்ளார்.இவ்வாறு அவர் பேசினார். தமிழகம் முதலிடம்
நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:கடந்த 2021ல், 2,300 புத்தொழில் நிறுவனங்களே இருந்தன. தற்போது, 9,600 ஆக உயர்ந்துள்ளது. இதில், 49 சதவீதத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள், பெண்களால் நடத்தப்படுகிறது. புத்தொழில் நிறுவன வளர்ச்சிக்கு தனித்துறை, தனி செயலர் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், 'ஸ்டார்ட் -அப்' துவங்குவதில் தமிழக முதலிடம் பிடித்துள்ளது.'டான்சி திட்டம்' வாயிலாக, 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு, 18.79 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, எஸ்.சி., -- எஸ்.டி., புத்தொழில் நிறுவனங்களுக்கு, 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 205 நிறுவனங்களுக்கு, 70 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.புத்தொழில் நிறுவன ஆராய்ச்சிக்கு, 28 'இங்குபேஷன்' மையத்திற்கு ஒரு கோடி ரூபாயும், அரசு கல்லுாரிகளில் உள்ள, ஒன்பது 'இங்குபேஷன்' மையத்திற்கு, 20 கோடி ரூபாயும் நிதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். புது வாய்ப்புகள்
சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி பேசுகையில், ''தொழிலாளர்களில் இருந்து தொழில் அதிபர்கள் ஆக மாறுவோரை ஊக்குவிக்க வேண்டும். இதற்காக அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காலநிலை மாற்றம், மாசு கட்டுப்பாடு, பல்லுயிர் பலவற்றில் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆண்டுக்கு ஆயிரம், 'ஸ்டார்ட் அப்' என்பது கனவு இல்லை; நிஜத்திலும் உருவாக்க முடியும். அதற்கு ஐ.ஐ.டி., உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்கும்,'' என்றார்.இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, புத்தொழில் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட, எலக்ட்ரிக் காரை ஓட்டி மகிழ்ந்தார். புத்தொழில் நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் பொருட்களையும் பார்வையிட்டு, பாராட்டு தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அரசின் 'ஸ்டார்ட் - அப்' தமிழ்நாடு நிறுவன இயக்குனர் சிவராஜ் ராமநாதன், தொழில் வணிக கமிஷனர் நிர்மல்ராஜ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் இன்னசன்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.