சாதித்த தமிழக மகளிர் அணிக்கு கவுரவிப்பு
சென்னை: தேசிய ஜூனியர் வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக மகளிர் அணி வீராங்கனையர், ரொக்க பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ராஜஸ்தானில், 49வது ஜூனியர் தேசிய வாலிபால் போட்டி, கடந்த 16ல் துவங்கி, 21ம் தேதி வரை நடந்தது. இறுதிப் போட்டியில், தமிழக மகளிர் அணி, ஹரியானாவுடன் மோதி, தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தமிழகத்திற்கு பெருமை சேர்ந்த மகளிர் அணிக்கு, தமிழக வாலிபால் சங்கம் சார்பில், நேரு விளையாட்டு அரங்கில், நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில், எஸ்.டி.ஏ.டி., நிர்வாகிகள் பங்கேற்று, மகளிர் அணியில் இடம்பெற்றவர்களுக்கு, தலா 10,000 ரூபாய் ரொக்க பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.