உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாரிய குடியிருப்புகளில் மீட்பு பணியில் சிக்கல் பழைய பாக்கி தராததால் ஒப்பந்ததாரர்கள் கைவிரிப்பு

வாரிய குடியிருப்புகளில் மீட்பு பணியில் சிக்கல் பழைய பாக்கி தராததால் ஒப்பந்ததாரர்கள் கைவிரிப்பு

சென்னை:பெரும்பாக்கம், செம்மஞ்சேரி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 28,000 வீடுகள் உள்ளன.ஒவ்வொரு தீவிர கனமழைக்கும், இந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த ஆண்டு வீசிய 'மிக்ஜாம்' புயல் வெள்ள பாதிப்பில், தரைதளத்தில் உள்ள 4,000 வீடுகள் மூழ்கின.வீடுகளில் இருந்து வெளியே வர, 3, 4 நாட்கள் வரை ஆனது. உணவு, மின்சாதன பொருட்கள், சேதமடைந்த குழாய், குடிநீர் தொட்டி சீரமைப்பு உள்ளிட்ட மீட்பு பணிகளை, 10க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் செய்தன.இவர்கள், 25 லட்சம் ரூபாய்க்கு மேல், தங்கள் சொந்த பணத்தை செலவு செய்துள்ளனர். ஓராண்டாகியும், பணி மேற்கொண்ட நிறுவனங்களுக்கு, வாரியம் பணம் வழங்கவில்லை.இதனால், நடப்பு பருவமழைக்கு ஒப்பந்ததாரர்கள் சீரமைப்பு பணிகளை கண்டுகொள்ளாமல் மவுனமாக உள்ளனர். இதனால், மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:மக்களின் தவிப்பு அறிந்து, வங்கியில் கடன் வாங்கி, 2023ம் ஆண்டு மழைக்கு செலவு செய்தோம். அதன் பின், அதிகாரிகள் உத்தரவிடும் போதெல்லாம் வடிகால் துார் வாருவது, அவசர சீரமைப்பு பணிகளை செய்து கொடுத்தோம்.எனினும், கடந்த ஆண்டு செலவு செய்த பணத்தை தரவில்லை. இந்த பருவமழைக்கு, அதிகாரிகள் உத்தரவை நிறைவேற்ற முடியுமா என தெரியவில்லை. என்ன செய்வது என தெரியாமல் உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கடந்த ஆண்டு, ஒப்பந்த நிறுவனங்கள் செலவு செய்த பணத்தை கேட்டு, உயர் அதிகாரிகளுக்கு கோப்புகள் அனுப்பி உள்ளோம். வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை