கொளத்துாரில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு * இயந்திரம் வெற்றிகரமாக வெளியேற்றம்
சென்னை, மாதவரம் -- சோழிங்கநல்லுார் மெட்ரோ தடத்தில், கொளத்துார் சாய்வுதளத்தில் இருந்து கொளத்துார் நிலையம் வரை, 246 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடித்து, சுரங்கம் தோண்டும் இயந்திரமான 'குறிஞ்சி' வெற்றிகரமாக வெறியேறியது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒரு வழித்தடமான மாதவரம் - சோழிங்கநல்லுார் வரை, 44.6 கி.மீ., மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. மாதவரம் பால் பண்னையில் துவங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்துார் வழியாக சோழிங்கநல்லுார் வரை இந்த வழித்தடம் செல்கிறது. இந்த வழித்தடத்தில் 5.8 கி.மீ., சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என பெயரிட்டு, நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன. இந்த தடத்தில் சுரங்கப்பாதை மற்றும் சாய்வுப் பாதைகளை அமைக்கும் பணியை, 'டாடா புராஜெக்ட்ஸ்' நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான 'குறிஞ்சி' கொளத்துார் சாய்வுதளத்தில் இருந்து, 246 மீட்டர் நீளம் சுரங்கம் அமைக்கும் பணியை நேற்று முன்தினம் நிறைவு செய்து, கொளத்துார் நிலையம் வந்தடைந்தது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி, அனைத்து சவால்களையும் கடந்து, பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், லிவிங்ஸ்டோன் எலியாசர் உள்பட பலர் பங்கேற்றனர். ***