மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது
செங்குன்றம், சென்னை வள்ளலார் நகரில் இருந்து, மாநகரப் பேருந்து தடம் எண் 57 நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் பேருந்து நிலையத்திற்கு 10:00 மணியளவில் வந்தது. அப்போது பேருந்து, அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிளில் உரசுவது போல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மாநகர ஓட்டுனர் பிரேம்குமார், 50 என்பவரை தாக்கினர். இதில் காயமடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய கோரி போராட்டத்தில் இறங்கினர். பல பகுதிகளில் சில மாநகரப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் செங்குன்றம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஓட்டுனரை தாக்கிய செங்குன்றம் அடுத்த விளங்காடுபாக்கம் மல்லி மாநகரைச் சேர்ந்த அமீர், 29, நாரவாரி குப்பம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த முகமது அபி, 32 ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.