ரூ. 7 கோடி மோசடி இருவர் கைது
சென்னை, நிதிநிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தம் வாயிலாக கடன் வாங்கி, ஏழு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் பாட்டி, 37. அவரது நண்பர் செந்தில், 39. இருவரும், தங்களிடம் ஏழு கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தததாக, கொளத்துாரைச் சேர்ந்த ஏகன், 39, பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்த தீபக் உள்ளிட்டோர் மீது, போலீசில் புகார் அளித்தனர். தங்களது பெயரில் மெடிக்கல் ஸ்கேன் சென்டர் ஆரம்பித்து நடத்துவதாகவும், அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க வேண்டும் எனக்கூறி, போலி ஆவணங்களை அளித்து, கடன் பெற்று, மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்து இருந்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலி ஆவண புலனாய்வு பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட ஏகன் மற்றும் தீபக் ஜெயின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மோசடி செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.