குரோம்பேட்டை, பொழிச்சலுாரில் மாடியில் இருந்து விழுந்து இருவர் பலி
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, நியு காலனி, நான்காவது பிரதான சாலையை சேர்ந்தவர் விக்னேஷ், 30. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, ஜனனி என்ற மனைவியும், கியாரா என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜனனி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதாகவும், விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.மே 2ம் தேதி, மகள் கியாராவிற்கு சுவாமிமலையில் மொட்டை அடிக்க, மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றதை அறிந்த விக்னேஷ், சுவாமிமலைக்கு சென்றுள்ளார்.அங்கு, மாமியார் குடும்பத்தினருக்கும், விக்னேஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஜனனி அளித்த புகாரின்படி, சுவாமிமலை போலீசார், விக்னேஷை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.இதனால், மன உளைச்சலில் இருந்த விக்னேஷ், நேற்று முன்தினம் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.சுயநினைவு இன்றி கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்:பொழிச்சலுார், பிரேம் நகரை சேர்ந்தவர் மனோகரன், 47. கார் ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த மனோகரன், வீட்டின் இரண்டாவது மாடிக்கு சென்றார்.அப்போது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு, பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரியவந்தது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.