அறிவிக்கப்படாத போக்குவரத்து மாற்றம் சிந்தாதிரிபேட்டையில் பயணியர் தவிப்பு
சென்னை, கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்காக, எந்தவித அறிவிப்பும் இன்றி அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால், சிந்தாதிரிப்பேட்டை பயணியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் மேற்கு கூவம் சாலை உள்ளது. எழும்பூர் வழியாக சிந்தாதிரிப்பேட்டை வரும் அனைத்து அரசு பேருந்துகளும், இச்சாலை வழியாக தான் செல்லும். தற்போது, இச்சாலையில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, எந்தவித அறிவிப்பும் இன்றி, எழும்பூர் வழியாக சிந்தாதிரிப்பேட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்துகள் அனைத்தும், புதுப்பேட்டை எல்.ஜி., சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதனால் வழித்தடம் எண், '27பி' பேருந்தில் பயணித்த பயணியர், எழும்பூர் எல்.ஜி., சாலையிலிருந்து நடந்தே சிந்தாதிரிப்பேட்டைக்கு சென்று சிரமப்பட்டனர். இதுகுறித்து, பயணியர் கூறியதாவது: சிம்சன் வழியாக, சிந்தாதிரிப்பேட்டைக்கு வரும் பேருந்துகள், அருணாச்சலம் சாலை வழியாக செல்லும். எழும்பூர் வழியாக சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வாகனங்கள், மேற்கு கூவம் சாலை வழியாக தான் செல்லும். இந்நிலையில், மேற்கு கூவம் சாலையில் கான்கிரீட் சாலை அமைப்பதால், அவ்வழியே அரசு பேருந்துகள் செல்லாமல், சிந்தாதிரிபேட்டை வழியாக செல்லாமல், புதுப்பேட்டை எல்.ஜி., சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கம் செல்லும் வரையில் திருப்பி விடப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால், பயணியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.