உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் தொகுதி கொளத்துாரில் வண்ணான்குட்டை கபளீகரம்; அரசியல்வாதிகள் போட்டி போட்டு ஆக்கிரமிப்பு

முதல்வர் தொகுதி கொளத்துாரில் வண்ணான்குட்டை கபளீகரம்; அரசியல்வாதிகள் போட்டி போட்டு ஆக்கிரமிப்பு

முதல்வரின் கொளத்துார் தொகுதி, ஜி.கே.எம்.,பேட்டையில் உள்ள, 10 கோடி ரூபாய் மதிப்பிலான வண்ணான்குட்டை, அரசியல் வாதிகளால் போட்டிபோட்டு கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் பொறுப்பை தட்டிக்கழிக்கின்றன.சென்னை கொளத்துார், பெரவள்ளூர் காவல்நிலையம் அருகே உள்ள ஜி.கே.எம் காலனி 6வது தெரு முதல் 11வது தெரு வரை, வண்ணான் குட்டை என்ற நீர்நிலை உள்ளது. திரு.வி.க., நகர் மண்டலம், 60வது வார்டுக்குள் இந்த பகுதி உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த குளம் தற்போது சுருங்கி குட்டை போல் மாறிவிட்டது. அதே வேளையில், குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கொளத்துார், பெரவள்ளூர் உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழையின்போது, வண்ணான் குளம் தண்ணீர் தேங்கும் நீர்பிடிப்பு பகுதியாக இருந்தது. இந்த குளம், 10 ஆண்டுகளுக்குமுன் கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது. தற்போது குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. குளத்தையே கண்டுபிடிக்க முடியாத நிலையில், சிறு குட்டையாக மட்டுமே இருக்கிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் குளத்தை ஆக்கிரமித்து, 10க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டன. தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்த பின், குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் மேலும் அதிகமானது. தற்போது 30க்கும் மேற்பட்ட வீடுகள் குளத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு இடத்தின் அளவுக்கேற்ப, 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வசூல் நடத்துகின்றனர். இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி சாலையிலும், பெரவள்ளூர் காவல்நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. மழைக்காலத்தில், பெரவள்ளூர் காவல்நிலையம் குளம் போல் மாறிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து, ஜி.கே.எம்., பேட்டை மக்கள் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், ஜி.கே.எம்., பேட்டையில், ராணுவத்தினருக்கும், சலவைத் தொழிலாளர்களுக்கும், குடிசை மாற்று வாரியம் மூலம் வீட்டு மனைகள் பிரித்து வழங்கப்பட்டன. மனைகளுக்கு நடுவே இருந்த வண்ணான் குளம், மழைநீர் சேகரிப்புக்கும், சலவைத் தொழிலாளர் சலவை செய்யவும் பயன்பட்டு வந்தது. காலப்போக்கில் குளத்தில் கழிவுநீர் சேரத் தொடங்கியது. பின் கழிவுநீர் குட்டையாகவே மாறியது. இங்கு குப்பைகளும் அதிகளவு கொட்டப்பட்டு, ஆக்கிரமிப்புகளும் வளர்ந்து விட்டன. 1 ஏக்கர் பரப்பிலான குளத்தை, தற்போது தோண்டிப்பார்த்து தான் தேட வேண்டும். சீரமைப்பது யார் என்பதில், மாநகராட்சிக்கும், குடிசை மாற்று வாரியத்திற்கும் ஏற்பட்ட நீயா நானா சண்டையில், குளம் காணாமல் போய்விட்டது. முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியில்தான், இந்த கூத்து நடந்துள்ளது. இரண்டு திராவிட கட்சியினரும் போட்டி போட்டு குளத்தை பிளாட்களாக மாற்றிவிட்டனர். இந்த இடத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய். விசாரணை நடத்தினால் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலர் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாங்கள் பொறுப்பல்ல

ஜி.கே.எம்., காலனி குடியிருப்பு பகுதி, வண்ணான் குட்டை உள்ள இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைத்து விட்டோம். ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். - குடிசை மாற்று வாரிய அதிகாரி.

அது குட்டையே இல்லை

வண்ணான் குட்டை என்பது குட்டையே அல்ல. அது ஒரு பள்ளமான பகுதி. அதில், மழைநீர் தேங்கி, சலவை தொழிலாளர்கள் துணி துவைத்ததால், காலப்போக்கில் அது வண்ணான் குட்டையாகி விட்டது. அந்த இடம் குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமானது. அந்த இடத்தை கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். இதுவரை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அந்த இடம் தொடர்பாக வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளன. இடத்தை எங்களிடம் ஒப்படைத்திருந்தால், அதற்கான கடிதத்தை குடிசை மாற்று வாரியம் காட்டலாம். - மாநகராட்சி அதிகாரி.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஆக 22, 2025 05:09

முதல்வர் தொகுதியில் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லையென்றால், அப்புறம் அவருக்கு என்னதான் மதிப்பு?


முக்கிய வீடியோ