உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாசர்பாடி --- கணேசபுரம் மேம்பால பணி மந்தம் போக்குவரத்து நெரிசலால் மூலக்கொத்தளம் ஸ்தம்பிப்பு

வியாசர்பாடி --- கணேசபுரம் மேம்பால பணி மந்தம் போக்குவரத்து நெரிசலால் மூலக்கொத்தளம் ஸ்தம்பிப்பு

வியாசர்பாடி:வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி நெடுஞ்சாலையில், ஜீவா ரயில் நிலையம் அருகே கணேசபுரம் சுரங்கப்பாதை உள்ளது.வியாசர்பாடி, கொளத்துார், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்கு செல்வோர், வியாசர்பாடி - கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும். தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

ரூ.226 கோடி

பருவமழை காலத்தில் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து தடைபடுவது வாடிக்கை. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 142 கோடி ரூபாயில், கணேசபுரம் மேம்பாலம் கட்ட, சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, 226 கோடி ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது.சென்னை ஐ.ஐ.டி.,யின் அங்கீகாரத்துடன், 600 மீ., நீளம், 15 மீ., அகலத்திலும் மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை 2022ல் போடப்பட்டது.இந்த மேம்பாலம், புளியந்தோப்பு ஆடுதொட்டியில் இருந்து செல்வது ஒரு வழியும்; வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்பிற்கு வரும்போது மற்றொரு வழிபாதையாக அமைக்கிறது.ஆடுதொட்டியை அடுத்த கால்வாய் பகுதியில் இருந்து மேம்பாலம் துவங்கி, ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து, பெட்ரோல் 'பங்க்' வரை, மேம்பால சாலை செல்கிறது.ரயில்வே ஒப்புதல் பெற்று, ரயில்வே பகுதியில் மட்டும், 58 மீ., கட்டுமான பணி நடக்கிறது. இதற்காக, 45 அடி உயரத்திற்கு இரும்பு துாண்கள் அமைக்கப்படுகின்றன.புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், மற்றொருபுறம் உள்ள வியாசர்பாடி பகுதிகளில் பணிகள் துவக்கப்படவில்லை.

குமுறல்

இப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி, பூமிக்கு அடியில் செல்லும் 110 கே.வி., மின்கேபிள்கள் மாற்றும் பணிகளால் மேம்பால பணிகள் தடைபட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், மூன்று ஆண்டுகளாகியும், 30 சதவீத பணிகள்கூட இதுவரை முடியவில்லை என, பகுதி மக்கள் குமுறுகின்றனர். மேலும், மேம்பால பணியால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

'டிராபிக் ஜாம்'

தற்போது கொருக்குப்பேட்டை, எழில் நகர் மேம்பால பணியும்; வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பால பணியும் நடந்து வருவதால், அனைத்து வாகனங்களும் மூலக்கொத்தளம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. 'பீக் ஹவர்' வேளைகளில், இப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, கொருக்குப்பேட்டை, எழில் நகர் மற்றும் வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பால பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அக்டோபரில் திறப்பு

இது குறித்து மேம்பால துறை அதிகாரிகள் கூறியதாவது:மேம்பால பணியால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது பூமிக்கு அடியில் செல்லும் 110 கே.வி., மின் கேபிள்களை மாற்றும் பணிகளால், மூன்று மாதங்கள் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது, அதற்கான உபகரணங்கள் டில்லியில் இருந்து வந்த நிலையில், பணிகள் துவங்கி நடக்கின்றன. இப்பணிகள் முடிந்த உடன், குடிநீர், கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைத்து, பணிகள் விரைந்து முடிக்கப்படும். வரும் அக்டோபர் மாதத்திற்குள், பாலப்பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை