உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழையால் சாலையில் தண்ணீர் தேக்கம் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

மழையால் சாலையில் தண்ணீர் தேக்கம் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் பெய்த கனமழையால், குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் தேங்கிய தண்ணீரால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றில் சாய்ந்த 17 மரங்களை, மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை, கனமழை கொட்டி தீர்த்தது. அம்பத்துார் மண்டலத்தில் அதிகபட்சமாக, கொரட்டூர் பகுதியில், 13 செ.மீ., வரை மழை பொழிந்துள்ளது. வடக்கு நிழற்சாலை, ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட இடங்களில், முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இந்நிலையில், பாடி, வன்னியர் தெருவில் சாலையோரம் இருந்த ராட்சத மரம், அதிகாலையில் வீசிய பலத்த காற்றில் வேருடன் சரிந்து விழுந்தது. அதேபோல், அப்பகுதியில் மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கொரட்டூர் போலீசார் வந்து, அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்தை தடை விதித்தனர். 2 மணி நேரத்திற்கு பின் மின் விநியோகம் சீரானது. கோயம்பேடு சந்தையின் பல இடங்கள், சேறும் சகதியுமாக மாறி உள்ளன. இதனால், சந்தைக்கு பூ, காய்கறி உள்ளிட்டவற்றை வாங்க வந்த நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் அவதிப்பட்டனர். போக்குவரத்து தடை இந்த மழையால், திருவேற்காடு, வானகரம், அடையாளம்பட்டு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூவத்தில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதில், மதுரவாயல், நொளம்பூர் பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் நீரில் முழ்கின. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் 2 கி.மீ., சுற்றி, நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் ரத்னம் பாலம் வழியாக, ஆற்றை கடந்து செல்கின்றனர். ஏரிக்கு நீர்வரத்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று காலை முதல் வினாடிக்கு 450 கன அடி நீர் வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் கொள்ளளவு 0.97 டி.எம்.சி., நீர்மட்டம் 11.63 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் பிற தேவைக்கு 195 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 10.5 செ.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது. வீடுகளில் வெள்ளம் பரங்கிமலை ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சி ஜெகநாதர் ஏழாவது குறுக்குத் தெருவில் மழைநீர் செல்ல கால்வாய் இல்லாததால், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அதேபோல், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை, தெருக்களில் பாதிப்பு ஏற்பட்டது. 17 மரங்கள் சாய்ந்தன சென்னையில் இரு நாட்களாக பெய்த மழை மற்றும் பலத்த காற்றால், 17 மரங்கள் வேருடன் விழுந்தன. இவற்றை, மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக வெட்டி அகற்றினர். புகார் தாருங்கள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடக்கும் இடங்களில், மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி முறையான தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய, ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் செய்யும் ஒப்பந்தாரர்கள், பணி நடக்கும் இடங்களில் தடுப்புகள் அமைக்காமல், பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால், ஒப்பந்தாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அசம்பாவிதம் ஏற்படக்கூடிய இடங்கள் குறித்து, 1913ல் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். - சென்னை மாநகராட்சி மெட்ரோ பணியால் சிக்கல் சென்னையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்ட பணிகள், சென்னையின் பல இடங்களில் நடந்து வருகின்றன. அதனால், மாநகராட்சி வசமுள்ள பிரதான சாலைகள், மெட்ரோ நிர்வாகத்திடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மெட்ரோ ரயில் பணியால், இந்த சாலைகள் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால், அப்பகுதிகளில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, போரூர், சோழிங்கநல்லுார், பூந்தமல்லி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமாக சாலைகள் மாறியுள்ளதால், வாகனங்கள் அவற்றில் இறங்கி ஏறி செல்வதில் தாமதம் ஏற்படுகின்றன. இதனால், வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த மழையால், சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, வளசரவாக்கம் ஆற்காடு சாலை, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. - நமது நிருபர்கள் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை