கிரீம்ஸ் சாலையில் நடைபாதையை காணோம்
சென்னை:ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில், நடைபாதையே தெரியாத அளவிற்கு வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில், பாந்தியன் சாலை சந்திப்பு முதல் சென்னை குடிநீர் வாரிய அலுவலகம் வரை, இருபுற நடைபாதையிலும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வேறு வழியின்றி சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே கடந்து செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கிண்டியில் நடைபாதை சரியாக அமைக்காததால் வேறு வழியின்றி சாலையில் நடந்து சென்ற கல்லுாரி மாணவியர்கள் மூவர் மீது குடிநீர் வாரிய லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.இதேபோன்ற அபாயம் உள்ள நிலையில், கிரீம்சாலை நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.