உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கருங்கல் ஜல்லி விலை உயர்வு ஏன்? கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரணை

கருங்கல் ஜல்லி விலை உயர்வு ஏன்? கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை:கட்டுமான பணிக்கான கருங்கல் ஜல்லி, எம்- - சாண்ட் விலை உயர்த்தப்பட்டதன் பின்னணி குறித்து, கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படையில், நிலங்களுக்கு வரி விதிக்கும் சட்டம், சமீபத்தில் அமலுக்கு வந்தது. இதற்கு கருங்கல் குவாரி, 'கிரஷர்' உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏப்ரல், 16ல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறி, ஏப்ரல், 21ல் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர்.அரசு அனுமதியின்படியே, கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் விலையை உயர்த்துவதாக, குவாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். இதன்படி, ஒரு யூனிட் கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட், பி - சாண்ட் விலை தலா, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டது.இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள புவியியல் மற்றும் கனிம வளத்துறை அலுவலகத்தில், இந்த விலை உயர்வு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில், குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட வரி விகிதம் என்ன; அதனால் ஏற்பட்ட கூடுதல் செலவு எவ்வளவு; குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள புதிய விலை என்ன என்பது குறித்து, விவாதிக்கப்பட்டது.குறிப்பாக, வரி உயர்வுக்கும், விலை உயர்வுக்கும் இடையிலான வேறுபாடு, விலை உயர்வின் பின்னணி குறித்து, அதிகாரிகள் விசாரித்ததாக தெரிகிறது. இது தொடர்பான முழுமையான அறிக்கை, முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்னர், கருங்கல் ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் விலை உயர்வு தொடர்பாக, அரசின் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'ஆன்லைன்' வசதி

தமிழகத்தில் சிறு கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான, குவாரி உரிமம் பெறும் நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 'மேனுவல்' முறையில் பெறப்பட்டு வரும் விண்ணப்பங்கள், இனி, 'ஆன்லைன்' முறையில் மட்டுமே பெறப்படும் என, கனிம வளத்துறை அறிவித்துள்ளது.இதன்படி, குவாரி உரிமம் பெற விரும்பும் தனி நபர்கள், நிறுவனங்கள் இனி, https://mimas.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !