வீராங்கல் ஓடை தடுப்பு சுவரை உயர்த்தி பென்சிங் அமைக்கும் பணி துவக்கம்
ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் வீராகங்கல் ஓடை, கலங்கலில் இருந்து ஆதம்பாக்கம் வரை ஆக்கிரமிப்பால் சுருங்கியிருந்தது. இதனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.அப்பகுதிவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வீராங்கல் ஓடை புனரமைப்பு பணி, 13.90 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 2023ல் முடிக்கப்பட்டது.இருப்பினும், கடந்த ஆண்டு பருவமழையின் போது, வீராங்கல் ஓடையில் இருந்து வழிந்த நீர், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.மேலும், வேளச்சேரி- - பரங்கிமலை சாலையில் நடத்தப்படும் நடைபாதை கடைகளின் கழிவுகள், குப்பை வீராங்கல் ஓடையில் கொட்டப்படுவதால், கொசு தொல்லை அதிகரிப்பதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.எனவே, ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளிலும் மழைநீர் வழிந்து பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க, ஓடையை ஐந்தடி உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, கடந்த ஆண்டு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வீராங்கல் ஓடையை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதையடுத்து, ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட வீராங்கல் ஓடையில், தடுப்பு சுவரை உயர்த்தும் பணி நேற்று துவங்கியது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஆதம்பாக்கம் பகுதியில் வீராங்கல் ஓடையில், 900 மீட்டர் சீரமைப்பு பணி, 3.78 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஓடையின் ஒரு பகுதி மூன்று அடி உயரத்திற்கும், மற்றொரு பகுதி இரண்டு அடியும் உயர்த்தப்படுகிறது.மேலும், ஓடையின் மேல் பகுதியில், குப்பை கொட்டாத வகையில் இரும்பு கம்பிகளால் பென்சிங் போடப்படுகிறது. இதில், ஓடையில் சேகரமாகும் கசடுகளை, வாகனங்களை இறக்கி எடுக்கும் வகையில் வழித்தடமும் அமைக்கப்படும். இப்பணிகள், அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.