உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து வீட்டில் சிக்கியோரை துணிச்சலாக மீட்ட வாலிபர்

 தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து வீட்டில் சிக்கியோரை துணிச்சலாக மீட்ட வாலிபர்

தி.நகர்: தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி திணறிய நான்கு பேரை வாலிபர் ஒருவர் துணிச்சலாக மீட்டார். தி.நகர், ராமச்சந்திரா தெருவில் மூன்று மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஆறு வீடுகள் உள்ளன. குடியிருப்பின் இரண்டாவது மாடியில் சித்ரா சம்பத், 84 மற்றும் அவரது மகன் கிரிதர், 60, ஆகியோர் வசித்து வருகின்றனர். மூதாட்டி சித்ரா சம்பத், நேற்று மாலை வீட்டில் பூஜை செய்தபோது, எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனால், தாய், மகன் இருவரும் வீட்டின் பால்கனியில் தஞ்சம் அடைந்தனர். அதிகபடியான காற்று வீசியதால், தீயானது மூன்றாவது மாடிக்கும் பரவி குழந்தை, மூதாட்டி உட்பட நான்கு பேர் சிக்கி தவித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் மருந்து பொருட்கள் டெலிவரி செய்ய வந்த, பாடியைச் சேர்ந்த விமல், 30, என்கிற வாலிபர், குடியிருப்பின் கழிவு நீர் வெளியேற்றும் குழாய் மூலம், மூன்றாவது மாடிக்கு ஏறிச்சென்றார். பின் வீட்டினுள் சென்று, அங்கிருந்தவர்களை மீட்டு, மொட்டை மாடிக்கு பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார். அதேநேரம் தகவலறிந்து, எழும்பூர், தி.நகர், கிண்டி, அசோக் நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மூன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே, மூதாட்டியின் வீட்டிலிருந்த 'காஸ்' சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள், 'ஸ்கை லிப்ட்' எனும் ராட்சத இயந்திரங்கள் வாயிலாக, மூதாட்டி சித்ரா சம்பத், அவரது மகன் கிரிதர் மற்றும் மொட்டை மாடியில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்ட னர்.

'அனைவரையும் காப்பாற்றியதில் சந்தோஷம்'

வீட்டினுள் சிக்கித் தவித்தவர்களை துணிச்சலுடன் மீட்ட வாலிபர் விமல், 30, என்பவர் கூறியதாவது: நான் மருத்து பொருட்களை டெலிவரி செய்வதற்காக, அருகில் உள்ள மருந்தகத்துக்கு வந்தேன். அப்போது தான் தீ விபத்தை பார்த்தேன். உடனே, மருந்து பொருட்களை டெலிவரி செய்யாமல், தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு சென்றேன். முதலில் போலீசார், 'என்னை அங்கு செல்ல வேண்டாம்' என தடுத்தனர். உள்ளே சிக்கியிருப்பவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு, நான் சென்று அங்கிருந்த குழாய் வாயிலாக மேலே சென்றேன். அங்கு சிக்கியிருந்தோரை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில், உடனடியாக மேலே சென்றேன். என்னை பார்த்து சிலர், எனக்கு பின்னால் ஏறினர். அவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்தவர்களை மீட்டேன். அனைவரையும் காப்பாற்றியதில் சந்தோஷம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி