விவசாயிகள் அடையாள அட்டை; 31ம் தேதிக்குள் பதிவு செய்யனும்
மேட்டுப்பாளையம்; விவசாயிகளுக்கான தனி அடையாள அட்டை எண் பெற, காரமடை வட்டார விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.இதுகுறித்து காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியதாவது:-விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நிலஉடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன் பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழகத்தில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.காரமடை வட்டார விவசாயிகள் தங்களது கிராமங்களில் நடக்கும் சிறப்பு முகாம்கள், அரசு இ- சேவை மையங்கள் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நிலஉடைமை விவரங்கள், ஆதார் எண், தொலைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து, எவ்வித கட்டணமுமின்றி பதிவு செய்யலாம். வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.-----------------