மின் உற்பத்தி நிலையத்தில் ஜெனரேட்டர் பழுதால் தண்ணீர் திறப்பு நிறுத்தம்!: நடவடிக்கை எடுக்க அமைச்சருக்கு விவசாயிகள் மனு
பொள்ளாச்சி: சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் டர்பன் (ஜெனரேட்டர்) பழுது காரணமாக காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மண்டலத்துக்கும், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.நடப்பாண்டு பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு வழியாக சர்க்கார்பதிக்கு நீர் திறக்கப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு நீர் இருப்பு வைத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு கடந்த, 29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் சுற்று தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், நேற்றுமுன்தினம் ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டதால், காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு
இது குறித்து தகவல் அறிந்த திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஜெனரேட்டர் பழுது சரி செய்யும் வரை நீர் நிறுத்தம் செய்யப்பட்டதை பார்வையிட்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தினர்.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'சர்க்கார்பதி ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டதையடுத்து சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் சரி செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். விவசாயிகள் பாதிப்பு
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று முடிந்த நிலையில், இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென்று சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள டர்பன் (ஜெனரேட்டர்) பழுதடைந்துள்ளது. இதனால், உற்பத்திக்கு பிறகு காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், ஒரு லட்சம் ஏக்கர் பயிர் செய்துள்ள சின்ன வெங்காயம், மக்காச்சோளம், நிலைப்பயிரான தென்னை ஆகியவை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடுமையான பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள பை பாஸ் வழியாக, 600 கன அடி தண்ணீர் தான் எடுக்க முடியும். அந்த தண்ணீர் கேரளாவுக்கும், ஆழியாறு அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கே போதுமானதாக இருக்காது; திருமூர்த்தி அணைக்கு சுத்தமாக நீர் வராது.இச்சூழலில், அப்பர் ஆழியாறு அணையில் இருந்து, 'பை -பாஸ்' வழியாக ஆழியாறு அணைக்கு தேவையான தண்ணீரை திறந்து விடுவது வழக்கமானதாகும். அப்போது, சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், பை - பாஸ் வழியாக எடுக்கப்படும் தண்ணீர் முழுவதும் திருமூர்த்தி அணைக்கு வழங்கப்படும்.இவ்வாறாக இரண்டு அணை பாசன விவசாயிகளும் பாதிககப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் சூழலில், தற்போது அப்பர் ஆழியாறு அணையின் பை - பாஸ் வழியாக ஆழியாறு அணைக்கு தண்ணீர் எடுப்பது காலதாமதம் ஆகிறது. எனவே, திருமூர்த்தி அணை விவசாயிகள் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர்.எனவே, போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து அப்பர் ஆழியாறு அணை பை - பாஸ் வழியாக ஆழியாறு அணைக்கு தண்ணீரை திறந்து விட்டு சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலைய பை - பாஸ் வழியாக எடுக்கப்படும் தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு வழங்க வேண்டும்.மேலும், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், பழுதாகி உள்ள டர்பனை (ஜெனரேட்டர்) போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு திருமூர்த்தி அணைக்கு உரிய தண்ணீரை கொண்டு செல்ல, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மனு அனுப்பி வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.