மேலும் செய்திகள்
வீடு வழங்க வேண்டும் கிராம சபையில் கோரிக்கை
12-Aug-2024
அன்னுார் : '10 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் பயனில்லை,' என கிராம சபையில் மக்கள் புகார் தெரிவித்தனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றியம், வடக்கலுார் ஊராட்சி, மூக்கனுாரில், நேற்றுமுன்தினம் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. விவசாயி மயில்சாமி தலைமை வகித்தார்.கூட்டத்தில் சமூக தணிக்கையாளர் கனகராஜ் தணிக்கை அறிக்கை வாசித்து பேசியதாவது:பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பணிகளில் ஒரு ஆட்சேபனையும், 100 நாள் வேலைத்திட்ட பணிகளில் ஒரு ஆட்சேபனையும் என இரண்டு ஆட்சேபனைகள் உள்ளன.கடந்த நிதியாண்டில், இந்த ஊராட்சியில், ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில், மண் வரப்பு, மழை நீர் சேகரிப்பு மையம், நாற்றுப்பண்ணை, சாலை அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட 130 பணிகள் செய்யப்பட்டுள்ளன.பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 295 சதுர அடியில் வீடுகள் கட்டப்படுகிறது. இதில் மத்திய அரசு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 770 ரூபாயும், மாநில அரசு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 800 ரூபாயும் ஒதுக்குகின்றன. வேலை அட்டை பெற்றவர்கள், ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் ஆவர்,'' என்றார்.கூட்டத்தில் மூக்கனூர் மக்கள் பேசுகையில், ''எங்கள் ஊரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் உள்ளன. சில வீடுகளில் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் வசிக்கின்றன. தொகுப்பு வீடு கட்டித் தரும்படி கடந்த 10 ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறோம். இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை.எங்களுக்கு சொந்தமாக ஒன்றரை சென்ட் மற்றும் இரண்டு சென்ட் இடம் உள்ளது. ஆனால் குடிசை வீடு, தகர சீட்டு வீடு, ஓட்டு வீடு அல்லது 20 ஆண்டுகளுக்கு முந்தைய வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே தற்போது புதிதாக வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும். சிலருக்கு மட்டும் 100 நாள் வேலை தருகின்றனர். பலருக்கு 70 அல்லது 80 நாள் மட்டும் தான் வேலை கிடைக்கிறது,'' என்றனர்.இது குறித்து ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதாக ஊராட்சி தலைவர் ராஜ்குமார் சமாதானம் தெரிவித்தார்.கூட்டத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
12-Aug-2024