கோவை:கோவை மாவட்டத்தில், 1,210 உயிரினங்களை இயற்கை ஆர்வலர்கள் பதிவு செய்தனர்.கோவையில், 'ஐ நேச்சுரலிஸ்ட்' செயலி வாயிலாக நமது வாழ்விடம் அருகே உள்ள உயிர்களை கண்டறிந்து பதிவு செய்யும் 'பயோ பிளிட்ஸ்' நிகழ்வு கடந்த, ஏப்., 26 முதல், 29 ம் தேதி வரை நடந்தது.நான்கு நாட்கள் நடந்த நிகழ்வில், சிட்டி பேர்ட் அட்லஸ், சித்தார்த் பவுண்டேஷன், உலக வன நிதியம், கோவை நேச்சர் சொசைட்டி, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி சங்கம், குமரகுரு மற்றும் கொங்குநாடு கல்வி நிறுவனங்கள், துருவம் பவுண்டேஷன், ஓசை, வனஉயிரின மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு, கோவை வனஉயிரின பாதுகாப்பு அமைப்பு, நெஸ்ட், ட்ரீ , பார் எர்த் பவுண்டேசன், கியூப் உள்ளிட்ட, 15 அமைப்புகள் பங்கேற்றன. உலகளாவிய பயோ பிளிட்ஸ் என்பது குறிப்பிட்ட பகுதியில் உள்ள உயிரினங்களை ஆவணப்படுத்துவது. கோவை மாநகரத்தைச் சுற்றியுள்ள, 88 பார்வையாளர்களால், 1210 வகையான வெவ்வேறு உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை, 5,161 பதிவுகள் கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தமிழகத்தில் முதலிடமும், இந்தியாவில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில், தற்போதைய கண்காணிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.இந்நிகழ்வில், இந்திய நரி, நீலகிரி மந்தி ஆகியவையும், பறவைகளில் தீக்காக்கை, காட்டு பஞ்சுருட்டான், மர கதிர்குருவி மலபார் காட்டு கீச்சான் ஆகியவை கண்டறியப்பட்டன. பட்டாம்பூச்சிகளில்,பெரிய அரேபிய சால்மன், பல வால் ஓக் ப்ளூ, கவுடி பரோன் மற்றும் பாயின்ட் சிலியட் ப்ளூ மற்றும் சிலந்திகளில், பியூசெடியா விரிடானா, ஹெரேனியா மல்டிபங்க்டா, ஹார்மோசிரஸ் பிராச்சியாடஸ், பிண்டெல்லா விட்டடா வும் பதிவு செய்யப்பட்டன. மேலும், மரங்களில், வேப்ப மரம், ஆலமரம் மிகவும் பொதுவான மர இனங்களாக பதிவு செய்யப்பட்டன.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில்,''வயது அல்லது கல்விப் பின்னணியை கருத்தில் கொள்ளாமல், தங்களைச் சுற்றியுள்ள பல்லுயிரியலைப் பதிவு செய்ய இயற்கை ஆர்வலர்களை ஊக்குவிப்பதே பயோ பிளிட்ஸின் நோக்கம்,'' என்றனர்.