உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 13,977 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்; 10,868 பேர் கைது

13,977 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்; 10,868 பேர் கைது

கோவை;தமிழக போலீஸ் டி.ஜி.பி., சங்கர் ஜிவால், கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி., சரவணசுந்தர் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி எஸ்.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கடந்த 30 மற்றும் 31ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள், கலந்தாய்வு கூட்டங்களை நடத்தினார்.சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், கோவை சரக போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம், பதுக்கி வைத்து விற்கும் ரவுடிகள் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்தார்.அதன்படி, நடப்பாண்டில் கோவை சரகத்தில், 675 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில், 749 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து, 738 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 36 பேர் குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1,294 வழக்குகள் பதிவு

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து, 1,731 இடங்களில் சோதனை செய்ததில், 1,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில், 1,300 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து, 12,916 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 725 கடைகள் போலீசாரால் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் வாயிலாக சீல் வைக்கப்பட்டது.அதேபோல, கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள, 7,367 கடைகளில் சோதனை செய்து, குட்கா விற்பனை செய்த கடைகளைக் கண்டறிந்து, 11 பேரை கைது செய்து, 323 கிலோ குட்கா பறிமுதல் செய்து, 9 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

23 பேர் மீது குண்டாஸ்

சட்டவிரோத மதுவிற்பனை செய்தவர்கள் மீது கோவை சரகத்தில், 8,722 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8,808 பேர் கைது செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து, 102 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த, 23 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 109 வாகனங்களை ஏலம் விடுவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோவையில் இவ்வாண்டு, 698 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. நன்னடத்தை பிணையை மீறியதற்காக, 3 ரவுடிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற காவலில் இருந்து பிணையில் வெளியில் வந்த, 24 ரவுடிகளின் பிணையை ரத்து செய்து, பிடிக்கட்டளை நிலுவையில் உள்ள ரவுடிகளுக்கு ஜாமீன் கொடுத்த, 9 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த, 27 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரவுடிகளின் சொத்துக்களின் மீது நிதி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த ஓராண்டில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட, 4 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு ரவுடிக்கு கடுங்காவல் தண்டனையும் கோர்ட்டில் பெறப்பட்டுள்ளது.இவைகளை ஆய்வு செய்த டி.ஜி.பி., கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீது, புதிய சட்டத்தின்படி உரிய வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். ரவுடிகளை கண்காணிப்பதற்காக, தனி போலீசார் அடங்கிய குழு அமைத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.

குறித்து ஆலோசனை

கோவையில் புதிதாக கட்டப்படும் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் ஸ்டேஷன் பராமரித்தல் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் பழுதுகளை கண்டறிந்து, அவைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி