ஒரு பூத்துக்கு 200 பேரை சேர்க்க வேண்டும்; மத்திய அமைச்சர் பேச்சு
மேட்டுப்பாளையம் : ''ஒரு பூத்திற்கு உட்பட்ட பகுதியில், கட்டாயம், 200 பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்,'' என, பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார். மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காரமடையில், பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. நீலகிரி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது: பா.ஜ.,வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், வரும் இரண்டு நாட்களுக்குள், ஒவ்வொரு பூத்திற்குட்பட்ட பகுதிகளில் குறைந்தது, 50 பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். மேலும் வருகிற, 25-ம் தேதிக்குள் ஒரு பூத்துக்கு, 200 பேர் கட்டாயம் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள, மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், 75 ஆயிரம் பேர் கட்டாயம் சேர்க்க வேண்டும். அதற்காக பொறுப்பில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் விக்னேஷ், செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.