உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 43 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க திட்டம்

கோவையில் 43 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க திட்டம்

கோவை;ஓட்டுச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:கோவை மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி, 20ம் தேதி துவங்கியது; அக்., 20 வரை நடைபெறும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு பணி மேற்கொள்வர். இவர்கள் அலுவலக பணியை முடித்து விட்டு, பிற்பகல் நேரங்களில் களப்பணியாற்றுவர்.அப்போது, 17 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், 18 வயது பூர்த்தி செய்தவர்களை பட்டியல் சேர்ப்பது; விடுபட்டோரை சேர்ப்பது; இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்ளை நீக்கம் செய்வது; முகவரி மாற்றம், பெயர் மற்றும் வயது உள்ளிட்ட திருத்தங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வர்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வுக்கு வராவிட்டால், ஓட்டுப்பதிவு அலுவலர் அல்லது உதவி ஓட்டுப்பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம். அக்., 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தவறு இருந்தால், அக்., 29 முதல் நவ., 28 வரை விண்ணப்பம் கொடுத்தோ அல்லது இணைய வழியிலோ விண்ணப்பித்து தீர்வு காணலாம். இந்நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு சிறப்பு முகாம்கள், இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதிகளில் நடத்தப்படும் அதன் தொடர்ச்சியாக பெறப்படும் படிவங்கள பரிசீலிக்கப்பட்டு, 2025 ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.இதற்கு முந்தைய நடவடிக்கையாக, ஓட்டுச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 2085, புறநகரில் 992 என, மொத்தம், 3,077 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள, 43 ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டு, வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில், வாக்காளர் பட்டியலில் சில பகுதிகளை பிரித்தல், சில பகுதிகளை ஒன்றிணைத்தல், கட்டடங்களை மாற்றுதல், அமைவிடத்தை மாற்றம் செய்தல் மற்றும் ஓட்டுச்சாவடியின் பெயர் மாற்றம் செய்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக கோரிக்கை மற்றும் கருத்துகளை, செப்., 6க்குள் சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகளில், 1,500 வாக்காளர்கள் இருப்பதாக அறிந்தால், அதே வளாகத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்துரை வழங்கலாம். இன்றைய நாள் (ஆக., 30) நிலவரப்படி, மாவட்ட அளவில், 15 லட்சத்து, 39 ஆயிரத்து, 789 ஆண் வாக்காளர்கள், 16 லட்சத்து, 2 ஆயிரத்து, 278 பெண் வாக்காளர்கள், 646 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 31 லட்சத்து, 42 ஆயிரத்து, 713 வாக்காளர்கள் உள்ளனர்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.கூட்டத்தில், தி.மு.க., சார்பில் தமிழ்மறை, அன்புசெழியன், சுரேஷ், அ.தி.மு.க., சார்பில் ராஜேந்திரன், சோமு, தே.மு.தி.க., சார்பில் சந்துரு, காங்கிரஸ் சார்பில் காந்த்குமார், வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'கூடுதல் பூத் தேவையில்லை'

அ.தி.மு.க., தரப்பில் வக்கீல் ராஜேந்திரன் பேசுகையில், ''கவுண்டம்பாளையத்தில் கூடுதலாக 16 பூத் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயரை நீக்கினால், ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை குறையும்; அரசுக்கான செலவு தவிர்க்கப்படும். 500 குடியிருப்புகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 'கேட்டடு கம்யூனிட்டி'க்குள் பூத் அமைத்தால், முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது,'' என்றார்.

'தவறில்லாத பட்டியல்'

தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தமிழ்மறை பேசுகையில், ''இறப்பு சான்றிதழ் வழங்கினால் மட்டுமே இறந்தவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் இறந்தவர்கள் பட்டியல் இருக்கும்; அதன் அடிப்படையில் இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும். வீதிகள் அடுத்த ஓட்டுச்சாவடிகளுக்கு 'ஜம்ப்' ஆகியிருப்பதை கண்டறிந்து தவிர்க்க வேண்டும். சுருக்க முறை திருத்தப் பணி மேற்கொள்வதை தவிர்த்து, புதிதாகவே, 100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை