இரும்பு வியாபாரி வீட்டில் தங்க கட்டி, பணம் கொள்ளை
கோவை:இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.20 லட்சம் தங்க கட்டி மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை போனது.கோவை ஜி.என்.மில்ஸ் சேரன் நகரை சேர்ந்தவர் சச்சின் குமார், 52; இரும்பு வியாபாரி; கடந்த, 16ம் தேதி சச்சின் குமார், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புனே சென்றார். அங்கிருந்து, 21ம் தேதி கோவை திரும்பினார். நேற்று முன்தினம், அவர் வீட்டில் இருந்த லாக்கரை திறந்து பார்த்தார்.அப்போது அதில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான, 398 கிராம் தங்க கட்டிகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.