மது அருந்த பணம் கிடைக்காததால் பூச்சி மருந்து குடித்தவர் உயிரிழப்பு
தொண்டாமுத்தூர் : ஆண்டிபாளையத்தில், மது அருந்த பணம் கிடைக்காததால், பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஆண்டிபாளையம், அண்ணா வீதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து,61; கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். பேச்சிமுத்து, மது பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். இதனால், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவித்தார். கடந்த சில நாட்களாக, மது அருந்த பணம் கிடைக்காததால், மனவிரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி, வீட்டிலிருந்த பேச்சிமுத்து, பூச்சிமருந்து குடித்து வாந்தி எடுத்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.