உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்றரை மணி நேரம் திடீர் மின்தடை :பொள்ளாச்சியில் கட்சியினர் பதட்டம் 

ஒன்றரை மணி நேரம் திடீர் மின்தடை :பொள்ளாச்சியில் கட்சியினர் பதட்டம் 

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் சமயத்தில், ஒன்றரை மணி நேர மின்தடை ஏற்பட்டதால், அரசியல் கட்சியினர் இடையே பதட்டம் நிலவியது.பொள்ளாச்சியில், நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவுகள் முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டன. அப்போது, இரவு, 9:00 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது.பொள்ளாச்சி நகரம் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி முழுவதும் திடீரென மின்தடை ஏற்பட்டதால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,வினரிடையே பதட்டம் ஏற்பட்டது.

சந்தேகம்

இந்நிலையில், பொள்ளாச்சி வி.எஸ்.ஆர்.ஏ., பள்ளியில் இரவு,10:30 மணிக்கு திடீரென அதிகாரிகள் மெழுகுவர்த்தி ஏற்றியதை கண்ட கட்சியினர், 'சீல்' பிரிக்கப்பட்டதாக சந்தேகமடைந்தனர்.'சீல்' பிரித்து கள்ள ஓட்டு போடுவதாக வேகமாக தகவல் பரவியதையடுத்து, அங்கு அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் குவிந்தனர். அங்கு இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.அவர்கள் கூறுகையில், 'தி.மு.க.,வினர் துாண்டுதலின் பேரில் ஏதாவது நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். உடனடியாக 'சீல்' வைத்த இயந்திரத்தை காண்பிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்தடை செய்தது ஏன்; இதற்குரிய விளக்கம் அளிக்க வேண்டும்,' என்றனர்.சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார், கட்சியினருடன் பேச்சு நடத்தினர். இயந்திரத்தில் உள்ள சீல் காண்பிக்கப்பட்டதும் கட்சியினர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மின்தடைக்கு காரணம் என்ன?

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி பவர் ஹவுசில், இடி, மின்னல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொருத்தப்பட்ட கருவி, திடீரென வெடித்து சிதறியதால் மின்தடை ஏற்பட்டது. அதன்பின், ஊழியர்களை வரவழைத்து, சரி செய்து மின் இணைப்பு வழங்கப்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ