மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சுவாமி பங்கேற்பு
கோவை:'மெய்யழகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் நேற்று நடந்தது.'96' திரைப்பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று, கோவை கொடிசியா அரங்கத்தில் நடந்தது.திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படக் குழுவினர் அப்படம் குறித்த கருத்துகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.நடிகர் கார்த்தி கூறுகையில், “எனது வேர்கள், உறவுகள், கோவையில் தான் உள்ளது. '96' படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம், 6 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கியுள்ளார். மெய்யழகன் அற்புதமான படமாக இருக்கும். நானும், அரவிந்த் சுவாமியும் படம் முழுக்க வருவோம். இப்படம், 1996 காலகட்டத்தில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. எமோஷனலாக இருக்கும்,'' என்றார்.நடிகை ஸ்ரீ திவ்யா கூறுகையில், “நான் தேர்வு செய்து தான் படங்களில் நடிக்கிறேன். அதனால் இடைவெளி இருக்கலாம்” என்றார். படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், “படத்தின் கதை தஞ்சாவூர் பகுதியில் நடப்பது போன்று உள்ளது. ஆனால், கதையின் கரு மையம் கோவை என்பதால் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இங்கு நடத்துகிறோம். எல்லாரையும் மரியாதையாக நடத்துபவர்கள் கோவை மக்கள். நமக்கு தெரியாமலேயே நம் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்கள் பற்றிய கதை இது,'' என்றார்.நிகழ்ச்சியில், நடிகர்கள் சிவகுமார், அரவிந்த் சுவாமி, இயக்குநர் பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.