உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டுகள் புறக்கணிப்பு! பிரச்னைகளை பட்டியலிட்டு கமிஷனரிடம் மனு

நகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டுகள் புறக்கணிப்பு! பிரச்னைகளை பட்டியலிட்டு கமிஷனரிடம் மனு

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி மயானம் குப்பை கிடங்காக மாறியுள்ளது; சாக்கடையில் துார்வாரிய குப்பை அகற்றாமல் உள்ளதால் சுகாதாரம் பாதிக்கிறது,' என, அடுக்கடுக்கான புகார்களை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பட்டியலிட்டுள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சாந்தி, ஜேம்ஸ்ராஜா, வசந்த் ஆகியோர், நகராட்சி கமிஷனர் கணேசனிடம் நேற்று மனு கொடுத்தனர். மூன்று வார்டுகளில் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.மனுவில் கூறியிருப்பதாவது:ஒளிராத தெருவிளக்குகளை மாற்றம் செய்ய மொபைல்போன் வாயிலாகவோ, வாட்ஸ்ஆப் குழு வாயிலாக தகவல் தெரிவித்தாலும், மாத கணக்கில் ஒப்பந்த ஊழியர்கள் சரி செய்வதில்லை.கடந்த மாதம், நகராட்சி முழுவதும் இரண்டு வண்டிகள், பணியாளர்கள் நியமித்து, ஒரு வார்டுக்கு வாரத்தில் இரண்டு முறை வந்து தெருவிளக்குகள் சரி செய்யப்படும் என வார்டு எண்களுடன் பட்டியலிடப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.* வார்டு எண் 1ல், பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பை, அழுகும் பொருட்களை மயானத்தில் கொட்டி, குப்பை கிடங்காக மாற்றியுள்ளனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.ரோட்டில், 'பேட்ச்ஒர்க்' பணிகள் மேற்கொள்ளாததால், மக்கள், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். மணிமேகலை வீதி பயன்படுத்தவே முடியாத நிலைக்கு மாறியுள்ளது. மழைநீர் வடிகால்களில் தேங்கும் குப்பை சரிவர அகற்றுவதில்லை. வீடுகளில் இருந்து தரம் பிரித்து வாங்கும் குப்பை, ஆங்காங்கே தேங்கி வைப்பதால், பொதுச்சுகாதாரம் பாதிக்கிறது.மூன்று சிறு பூங்காக்களும் போதிய பராமரிப்பின்றி, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.* 19வது வார்டுக்கு உட்பட்ட ஆரோக்கியநாதர் வீதி, கரிகால்சோழன் வீதி, ஜூபிளி கிணறு வீதிகளில் தார் சாலை பல இடங்களில் பெயர்ந்து விபத்துகளை ஏற்படுத்துகிறது. வார்டுக்கு உட்பட்ட, 13 வீதிகளில், மழைநீர் வடிகால் சிதிலமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் கழிவுநீர், மழைநீருடன் கலந்து வீடுகள் முன்பாக தேங்கி நிற்பதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது.வெங்கட்ரமணன் வீதி யுனைடெட் மஹாலில் இருந்து ராஜாமில் ரோடு வரை, பிரதான சாக்கடை துார்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.மழைக்காலங்களில் வீடுகளுக்குள் கழிவுநீர் செல்ல வாய்ப்புள்ளது.வெங்கட்ரமணன் நடுநிலைப்பள்ளிக்கு பின்புறமாக உள்ள கந்தசாமி சந்தில், வசிக்கும் 20 குடும்பத்தினர்,வீடுகளுக்கு செல்ல, நான்கு அடி பாதை மட்டுமே உள்ளதால், சிரமப்படுகின்றனர். எனவே, பள்ளியின் சுற்றுச்சுவரை மேலும் நான்கு அடிக்கு மாற்றி அமைத்தால் பயனாக இருக்கும்.கடந்த நான்கு ஆண்டுகளாக நகராட்சி பகுதியில் தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதில்லை. நிதி ஒதுக்கி நவீன வசதியுடன் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை கருத்தடை சிகிச்சை நடைபெறவில்லை. தெருநாய்கள் தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.* வார்டு 8ல், அண்ணா நகர் - ஐயப்பா லே - அவுட் இணைப்பில், கல்வெட்டுகள் சிதிலமடைந்துள்ளது. அண்ணா நகர் அங்கன்வாடி அருகே பொதுகழிப்பிடம் ஒரு புறம் சுற்றுச்சுவர் இன்றியும், கதவுகளும் இல்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளது.விஜயபுரம் பகுதியில், தார்சாலை அமைக்க வேண்டும். தண்ணீர் குழாய் உடைந்து இரண்டு ஆண்டுகளாகியும் சரி செய்யவில்லை.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், 'அ.தி.மு.க., வெற்றி பெற்ற மூன்று வார்டுகளில் அதிகளவு பிரச்னைகள் உள்ளன. அதை சரி செய்து தர வேண்டுமென நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை