மண்வளம் காக்க பல பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு அறிவுரை
பெ.நா.பாளையம்;விவசாயிகள் மண்வளம் காக்க, பல பயிர் சாகுபடி திட்டத்தை மேற்கொள்ளலாம் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறியுள்ளனர்.பல பயிர் சாகுபடி என்பது ஒரே வயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களை ஒன்றாக விதைத்து, அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் வாயிலாக, மண்ணின் வளத்தை பெருக்குவது ஆகும். இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகள் முதலில் மேற்கொள்ள வேண்டியது பல பயிர் விதைப்பு நடவடிக்கையாகும்.இம்முறையில் தானிய வகையை பயிர்களாக சோளம் ஒரு கிலோ, கம்பு அரை கிலோ, தினை, சாமை தலா கால் கிலோ, பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, கொண்டக்கடலை ஆகியவை தலா ஒரு கிலோ, எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு தலா, 2 கிலோ, அரை கிலோ கிராம் பசுந்தாழ் பயிர்களான தக்கை பூண்டு, சணப்பை தலா, 2 கிலோ ஆகியவற்றை ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும். இந்த விதைகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிலத்தின் பரப்பு, கிடைக்கும் விதைகளை பொறுத்து விதைக்கலாம். விதைகள் வளர்ந்து, 45 முதல், 50 நாட்கள் ஆகி பூத்த பின்பு, செடிகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக மண்ணில் நுண்ணுயிர் இனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், ஊட்டச்சத்து சமச்சீராக இருக்கும் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.