உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேட்டதை செய்யலை; கேட்காததை செய்யும் மாநகராட்சி! ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்போர் அதிருப்தி

கேட்டதை செய்யலை; கேட்காததை செய்யும் மாநகராட்சி! ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்போர் அதிருப்தி

கோவை; கோவை மாநகராட்சி, 31வது வார்டு ஐஸ்வர்யா கார்டனில், குடியிருப்போர் நலச்சங்கம் பராமரிப்பில் நல்ல நிலையில் இருந்த பூங்கா பென்சிங்கை அகற்றி விட்டு, 10 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக பென்சிங் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்வது, அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகராட்சி, 31வது வார்டுக்கு உட்பட்டது ஐஸ்வர்யா கார்டன். 5.20 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த லே-அவுட்டில், பொது ஒதுக்கீடாக, 52 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 72 மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 55 வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. பூங்கா அமைக்க ஒதுக்கிய இடத்தில், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் இணைந்து நிதி திரட்டி, குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைத்திருக்கின்றனர். பெரியவர்கள் 'வாக்கிங்' செல்கின்றனர். காலை நேரத்தில் டென்னிஸ் பயிற்சி பெறுகின்றனர். பூங்கா வளாகத்தை சுற்றிலும் பென்சிங் அமைத்து, நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர்.இச்சூழலில், அவ்வளாகத்துக்குள் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில், குடிநீர் தொட்டி கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, 'பூங்கா மட்டுமே அமைக்கப்படும்; வேறெந்த கட்டுமானமும் அமைக்க மாட்டோம்' என, மாநகராட்சி தரப்பில் உறுதி கூறியதால், அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.இதையடுத்து, பூங்கா சுற்றிலும் நடப்பட்டு இருந்த பென்சிங் கற்கள், கம்பிகள், கதவுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.தற்போது, மாநகராட்சி நிதியில், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி, புதிதாக கற்கள் நட்டு, பென்சிங் போட்டு, கதவுகள் அமைக்க முடிவு செய்திருப்பது, குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.இதுகுறித்து, ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:ஐஸ்வர்யா கார்டனில் வடிகால் வசதி இல்லாததால், வீடுகளுக்கு அருகாமையில் கழிவு நீர் தேங்கியுள்ளது; சுகாதாரப் பிரச்னை ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டமும் அமல்படுத்தவில்லை. இவ்விரு வசதியும் செய்து தரக்கோரி, மாநகராட்சியில் மனு கொடுத்தோம். அதற்கு பதில் கடிதம் அனுப்புகிறார்களே தவிர, வேலைகள் செய்து தர முன்வருவதில்லை. ஆனால், ஏற்கனவே பூங்காவை சுற்றியிருந்த பென்சிங்கை அகற்றி விட்டு, புதிதாக பென்சிங் போடுவதாக கூறி, 10 லட்சம் ரூபாயை செலவிடுகிறது. பொதுமக்களின் வரிப்பணத்தை தேவையின்றி செலவிடுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை