கலக்கிறது சவக்கிடங்கு ரத்தம்.. வாலாங்குளம் காப்போம்! நீர்வாழ் உயிரினம் சாகுது நித்தம்:அதிகாரிகள் அலட்சியத்தால் அவலம்
கோவை:அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் இருந்து வெளியேறும் ரத்தம், சாக்கடையில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இதனால் நோய்த்தொற்று ஏற்படுத்துவதோடு, அருகில் உள்ள வாலாங்குளத்தில் கலந்து, நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கும் காரணமாகிறது.கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கு கட்டடத்தில், 30 உடல்களை பாதுகாக்க வசதிகள் உள்ளன. விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள், தற்கொலை, சந்தேக மரணம், போலீஸ் வழக்காகும் இறப்புகள் போன்ற சடலங்கள், பிரேத பரிசோதனை மேற்கொண்ட பிறகே, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.தினமும், 15 முதல் 20 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக, 24 சடலங்களுக்கு, ஒரே நாளில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களில் இருந்து வெளியேறும் ரத்தம், குழாய் வழியாக மருத்துவமனையில் உள்ள வடிகாலில் (சாக்கடையில்) கலக்கிறது. நேற்று மூடப்பட்டு இருந்த பாதாள சாக்கடையில் இருந்து, ரத்தம் வெளியேறி ஆறாக ஓடியது.மருத்துவமனை ஊழியர்கள், அங்கு பிளீச்சிங் பவுடரை துாவினர். ஆனாலும் துர்நாற்றம் சகிக்க முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வாலாங்குளத்தில் கலப்பதால், மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.இதுகுறித்து, உடல் வாங்க காத்திருந்த மக்கள் கூறியதாவது:கோவை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களை வாங்க, ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளது. அங்கிருந்து துர்நாற்றம் வீசும் ரத்தம், வெளியேறி தலை சுற்றலை ஏற்படுத்துகிறது.துர்நாற்றம் மனதில் பதிந்து விடுகிறது. அதில் இருந்து மீள, சில நாட்களாகி விடுகிறது. அருகில் பள்ளி, கல்லுாரிகள், உணவகங்கள் உள்ளன. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.வடிகாலில் இருந்து வெளியேறும் ரத்தம், வாலாங்குளத்தில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. மீன்கள், நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இந்த விபரீத நிலையை தடுக்க, மருத்துவமனை நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து உடனடியாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களில் இருந்து வெளியேறும் ரத்தம், குழாய் வழியாக மருத்துவமனையில் உள்ள வடிகாலில் (சாக்கடையில்) கலக்கிறது. இந்த ரத்தம், பிற கழிவு நீருடன் வாலாங்குளத்தில் கலப்பதால், மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.