உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு பழைய ரயில் பெட்டி உணவகமானது! 48 பேர் அமர்ந்து சாப்பிட இருக்கை வசதி

ஒரு பழைய ரயில் பெட்டி உணவகமானது! 48 பேர் அமர்ந்து சாப்பிட இருக்கை வசதி

கோவை;கழிவு செய்யப்பட்ட ஒரு ரயில் பெட்டியை, கோவை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், 48 இருக்கைகளுடன் 'கோச்' உணவகமாக மாற்றியுள்ளனர்; வரும், 5ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அதிகமான எண்ணிக்கையிலான பயணிகளுக்கு போக்குவரத்து சேவையை ரயில்வே நிர்வாகம் அளித்து வருகிறது. அதேநேரம் ரயில்வே துறையின் வருவாயை பெருக்குவதற்காக, நடைமேடையில் ஸ்டால்கள் அமைப்பது; விளம்பரம் செய்வது; உணவகம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களை ஒட்டிய காலியிடங்களை பயன்படுத்தும் வகையிலும், பழைய ரயில் பெட்டிகளை மீண்டும் பயன்படுத்தும் வகையிலும், 'ரெஸ்டாரன்ட் ஆன் வீல்ஸ்' என்கிற திட்டத்தை செயல்படுத்துகிறது. கோவை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு அருகே தண்டவாளம் அமைக்கப்பட்டு, அதில், கழிவு செய்யப்பட்ட பழைய ஒரு ரயில் பெட்டி நிறுத்தப்பட்டது.அந்த பெட்டி புதுப்பிக்கப்பட்டு, 48 இருக்கைகளுடன் 'கோச்' உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. அருகாமையில் சமையலறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் உணவருந்தும் வகையில், 40 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 'கோச்' உணவகம் 'ஏசி' வசதி செய்யப்பட்டு இருக்கிறது. முதல் பிளாட்பாரத்தில் இருந்து உணவகத்துக்கு பயணிகள் வரும் வகையில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. ரயில் பயணம் மேற்கொள்ள இருப்போர் அல்லது பயணம் முடித்து திரும்புவோர், உயர்தர உணவு உட்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உணவகம், ஆக., 5 முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் இந்த உணவகம் நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ