| ADDED : ஜூலை 23, 2024 12:09 AM
அன்னுார்;சிறப்பு கிராம சபை கூட்டத்தில், 'கனவு இல்லம்' திட்டத்திற்கு ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர். தமிழக அரசு, குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவித்து, நிதி ஒதுக்கி உள்ளது. இதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, கடந்த மாதம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கணக்கெடுப்பில் விடுபட்ட, ஆனால் தகுதியான பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெற்று தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தும் படி அரசு அறிவுறுத்தியது.அதன்படி அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளிலும் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஒட்டர்பாளையம் ஊராட்சி, கிராம சபை கூட்டம் ஊராட்சி அலுவலகம் முன்புறம் நடந்தது. ஊராட்சித் தலைவர் சுமதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் முருகசாமி முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலர் அருண் பேசுகையில், இத்திட்டத்தில் வீடு கட்ட விரும்புவோர், தங்களது இடத்தின் பட்டா, ஆதார், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான நபர்களின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி உத்தரவு வழங்கப்படும். மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீடு கட்ட நிதி வழங்கப்படும்,'' என்றார்.ஒன்றிய பார்வையாளர் கந்தசாமி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். 21 ஊராட்சிகளிலும், ஏராளமான மக்கள் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பங்கள் அளித்தனர்.