கோவை;கோவை வெள்ளலுார் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி பூங்கா, வரும் ஜூன் இறுதியில் திறக்கப்பட உள்ளது.கடந்த 2017ம் ஆண்டுக்கு முன் பல ஆண்டுகளாக வறட்சியாக இருந்த வெள்ளலுார் குளம் மற்றும் 6.5 கி.மீ., நீர் வழிப்பாதை, கோவை குளங்கள் அமைப்பால் துார் வாரப்பட்டது. பின், குளத்தில் நீர் நிரம்ப துவங்கியது. குளக்கரையில், பல்லாயிரக்கணக்கான மியாவாக்கி மரங்கள் வைக்கப்பட்டு, தற்போது வனமாக காட்சியளிக்கிறது.குளக்கரையில் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை அதிகரித்ததை கண்டு, கோவை குளங்கள் அமைப்பு மற்றும், 'நேச்சர் அண்ட் பட்டர்பிளை சொசைட்டி' சார்பில், மாதம் ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.தமிழகத்தில் 327 வகை பட்டாம்பூச்சிகள் இருக்கும் நிலையில், கோவை வெள்ளலுார் குளக்கரையில் மட்டும், 103 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.இதையடுத்து, 'நிலோக்ரான்' தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியுதவியுடன், வெள்ளலுார் குளக்கரையில், 2023 ஜூன் 5ம் தேதி, நீர்வளத் துறையின் அனுமதியுடன், பட்டாம்பூச்சி பூங்கா அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தகவல் மையம்
கோவை குளங்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது:பட்டாம்பூச்சிக்கு உகந்த பல்வேறு வகையான செடிகள், அல்லி மற்றும் தாமரை குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி வகைகள் மற்றும் இவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற அரிய தகவல்களை தெரிவிக்கும் வகையில், தகவல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் கற்றலுக்கான சிறந்த இடமாக இது இருக்கும். இந்த பூங்கா, ஜூன் இறுதியில் திறக்க முடிவு செய்துள்ளோம். பூங்காவை பார்வையிட பதிவு செய்யும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வார நாட்களிலும், பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் அனுமதி வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.