| ADDED : மே 21, 2024 12:53 AM
போத்தனூர்;சுந்தராபுரத்திலிருந்து போத்தனூர் செல்லும் சாரதா மில் சாலையில், அம்ருத் திட்டத்தில் பில்லூர் குடிநீர் திட்ட பிரதான குழாய் போடப்பட்டுள்ளது. தற்போது இச்சாலையில் பாதாள சாக்கடை பணி நடக்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் குழாயில் தண்ணீர் விடப்பட்டு, சோதனை நடந்துள்ளது. அப்போது ராஜமுத்தையா நகர் பஸ் ஸ்டாப் அருகே, குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறியது. போத்தனூர் மார்க்கமாக சுமார், 150 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் ஓடை போல சென்றது. அப்பகுதி முழுவதும் சாலை சேறும், சகதியுமாக மாறியது.குடிநீர் வடிகால் வாரியத்தினர் மேற்கொண்ட சோதனையில், பாதாள சாக்கடை பணியின்போது குழாய் உடைக்கப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து, பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை தொழிலாளர்கள், உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனால் இவ்வழியே, கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. இருப்பினும் வாகன நெரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர். இன்றும் பணி நடக்கும் என்பதால், கனரக வாகனங்கள் மாற்று பாதைகளில் செல்லவேண்டும் என, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.