சிட்டி கிரைம்
அதிக வட்டி கேட்டவர் மீது வழக்கு
வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனா சர்மிளா, 49. காரைக்குடியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக, காரணம்பேட்டையில் உள்ள நிலத்தின் பத்திரத்தை வைத்து, தேவராஜ், 55 என்பவரிடம், ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆறு மாதங்கள் வட்டி கட்டியுள்ளார். பின்னர், வட்டி கட்ட முடியாததால், அசலுடன் சேர்ந்து கொடுப்பதாக கேட்டுள்ளார். அதற்கு முதலில் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என தேவராஜ் தெரிவிக்க, அதை கொடுத்துள்ளார். ரசீது கேட்டபோது கொடுக்க மறுத்துள்ளனர். நிலத்தின் பத்திரத்தை கேட்டபோது, ரூ.40 லட்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். மீனா சர்மிளா சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். பிளக்ஸ் வைத்த த.வெ.க., மீது வழக்கு
சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ், 40. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகி. இவர், சவுரிபாளையம் இந்திரா நகர் பகுதியில் அனுமதியின்றி கட்சி விளம்பரத்துக்கான பிளக்ஸ் பேனர் வைத்தார். இதையடுத்து, பீளமேடு போலீசார் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பேக்கரி அருகில் நின்றுகொண்டிருந்த லிங்கமூர்த்தி, 21 என்ற வாலிபரிடம் இருந்து, ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். லிங்கமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். விபச்சாரத்துக்கு அழைத்தவர் கைது
சித்தாபுதுார், அம்பிகா லே அவுட் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 23. வெளியூர் செல்வதற்காக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது, சேலம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருந்த நான்கு பேர், நந்தகுமாரை விபச்சாரத்திற்கு அழைத்துள்ளனர். நந்தகுமார் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். காட்டூர் போலீசார் துடியலுாரை சேர்ந்த ராஜம், 36, சத்யா, 34 ஆகியோரை கைது செய்தனர். மேலும், சிக்கந்தர் பாட்சா, ஸ்டீபன் ஆகியோரை தேடி வருகின்றனர்.