மெக்கானிக்கை தாக்கியவர்கள் கைது
ஒண்டிப்புதுார் அருகே எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன்,18. இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த தாமஸ்சாகோ(எ)சிபுவுக்கும்,30, மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கார்த்திகேயனை, சிபு மிரட்டிவந்துள்ளார். இதுகுறித்து கார்த்திகேயன் தனது நண்பர் ஸ்ரீதரிடம் தெரிவித்துள்ளார். இத்தகவல் சிபுவுக்கு தெரிந்து, அவரது கூட்டாளியான நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த ரெசித்,25, என்பவருடன் கார்த்திகேயனின் ஒர்க் ஷாப் சென்றார்.அங்கு வேலை செய்துகொண்டிருந்த கார்த்திகேயனை கிரிக்கெட் பேட்டாலும், கைகளாலும் இருவரும் தாக்கினர். காயமடைந்த கார்த்திகேயன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் சிபுவையும், ரெசித்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழாய் 'வால்வு' திருட்டு
செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் முனியம்மாள்,50. நேற்று முன்தினம் இவரது வீட்டின் வெளியே இருந்த குடிநீர் குழாயின் வெண்கல வால்வு திருடுபோனது. அதேபோல், அருகே வசிப்பவரின் வீட்டு வெளியே இருந்த குழாய் வால்வும் திருடுபோனது. இதுகுறித்து, செல்வபுரம் போலீசில் புகார் அளிக்க 'சிசிடிவி' காட்சி பதிவுகள் உதவியுடன், குமாரபாளையம், சண்முகராஜபுரத்தை சேர்ந்த அசோக்குமார்,45, என்பவரை கைது செய்தனர். 19 சவரன் நகை மாயம்
காந்திபுரம் அருகே ராம் நகர், சரோஜினி வீதியை சேர்ந்தவர் செரின்,32. உறவினர் ஒருவரது விஷேசத்துக்காக செரின் தனது குடும்பத்தினருடன் கடந்த, 11ம் தேதி வெளியே சென்றார். இரவு, 11:30 மணிக்கு வீடு திரும்பியவர்கள், தங்க நகைகளை பீரோவில் வைத்துள்ளனர்.கடந்த, 28ம் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது, நெக்லஸ், கம்மல், வளையல், செயின் என, 19 சவரன் நகையும், ரூ.92 ஆயிரம் பணமும் திருடுபோனது தெரிந்தது. செரின் அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மில் உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: மூவர் கைது
உக்கடம் அருகேயுள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 35: அரிசி மில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டிற்கு வந்த ஜியா, சிக்கந்தர்பாஷா ஆகியோர் இவரை வெளியே வருமாறு மொபைல் போன் மூலம் அழைத்தனர். வெளியே வந்தவரிடம் அவரது மொபைல்போனை சிக்கந்தர்பாஷா பிடுங்கினார். மேலும் அரிசி கடத்தல் குறித்து யாருக்கேனும் தகவல் கூறினாரா என கேட்டுள்ளார். ஜாபர் சாதிக் அதனை மறுத்துள்ளார்..அப்போது காரில் வந்த தவுபிக், 39, முஹமது அசாருதீன்,35, உள்ளிட்ட ஐந்து பேர் இவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினர். மேலும் காரில் ஏற்றி, குனியமுத்தூர், பாலக்காடு மெயின் ரோடு அருகேயுள்ள கார் பெயின்டிங் ஒர்க் ஷாப்பிற்கு கடத்திச் சென்றனர். நைலான் கயிற்றால் கட்டி, தாக்கினர். மேலும் அவரிடமிருந்த, 23 ஆயிரம் ரூபாயை பறித்து, அங்கிருந்து துரத்திவிட்டனர்.ஜாபர் சாதிக் புகாரில் குனியமுத்தூர் போலீசார் சிக்கந்தர்பாஷா, தவுபிக் மற்றும் முஹமது அசாருதீன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் நான்கு பேரை தேடுகின்றனர்.