உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம் செய்தி

பூட்டை உடைத்து திருட்டு

கோவை காந்திபுரம், 100 அடி ரோடு பகுதியைச் சேர்ந்த அருள் விமலன் என்பவரின் மனைவி பாண்டி மெஹல்வா, 29; இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார். இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த, 6 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. பாண்டி மெஹல்வா புகாரின்படி, ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், திருட்டில் ஈடுபட்டது கணபதி ஜெயப்பிரகாஷ் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார், 34, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

விபசாரம்; 5 பேர் கைது

கோவை சிங்காநல்லுார் திருநகர் பகுதியில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், தங்களிடம் அழகிய இளம்பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். அந்த வாலிபர் சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது ஒரு வீட்டில் இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் புரோக்கர்கள் பெங்களூருவை சேர்ந்த சுரேஷ், 42, திருநெல்வேலியை சேர்ந்த செல்வகுமார், 34, தாராபுரத்தைச் சேர்ந்த முருகானந்தன், 30, கோவை போத்தனுாரை சேர்ந்த கலைராஜா, 37, தேனி மாவட்டம் தாமரை குளத்தைச் சேர்ந்த சேதுராமன், 31, ஆகிய ஐந்து பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

--தவறி விழுந்து தொழிலாளி பலி

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணக்குமார், 40; இவர் கணபதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த, 28ம் தேதி அலுவலகத்தில், 18 அடி உயரத்தில் இருந்து பணிபுரிந்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணக்குமார் மனைவி மகேஸ்வரி, 31, புகாரின் படி சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

--நகைக்கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவை வைசியாள் வீதி முத்து விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 63; ஞாற்றுக்கிழமைகளில் ஜோதிடம் பார்த்து வருகிறார். அவரிடம் பி.பி.,வீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, 58, ஜோதிடம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது பாலசுப்பிரமணியம் தவறாக ஜோதிடம் பார்ப்பதாக, கிருஷ்ணமூர்த்தி கூறி வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியத்தை தாக்கினார். பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரமணியம், பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

-- மதுபோதை வாலிபர் கைது

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் உபேந்திரகுமார், 55; இவரது வீட்டின் கதவை இரவு யாரோ தட்டுவதை கேட்டு, உபேந்திரகுமாரின் மனைவி திறந்தார். அப்போது வெளியே மதுபோதையில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அந்த வாலிபரை அங்கிருந்து செல்லுமாறு அவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், அவரை தாக்கி தப்பி சென்றார். உபேந்திரகுமார் புகாரின் படி, பீளமேடு போலீசார் பெண்ணை, மதுபோதையில் தாக்கிய காளப்பட்டியை சேர்ந்த தர்மர், 33, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி