பவானி ஆற்றில் வண்ண வண்ண தண்ணீர்! ஆற்று நீர் நிறம் மாற காரணம் என்ன? மவுனம் காக்கும் அதிகாரிகளால் மக்கள் அதிர்ச்சி
மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றில் தண்ணீர் கருப்பு மற்றும் மஞ்சள் நிறமாக வருகிறது. எதனால் இந்த நிற மாற்றம்; காரணம் என்ன, என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்து தெளிவுபடுத்தாமல், காலம் கடத்தி வருவது, வேதனை அளிக்கிறது என, பொதுமக்கள் கூறுகின்றனர். மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் பவானி ஆறு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின், குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆற்றில் இருந்து தினமும் பல கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து, அதை சுத்தம் செய்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம் நகரில் இருந்து, சிறுமுகை மூளையூர் வரை, 17 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு பழையூர் பகுதியில், பவானி ஆற்று தண்ணீர் கருப்பு நிறமாக இருந்தது. கடந்த வாரம் சிறுமுகை ராமர் கோவில் வரை ஆற்றில் தண்ணீர் கருப்பு நிறமாக மாறி இருந்தது. சிறுமுகை அருகே மூளையூரில், ஆறு ஊராட்சிகளின் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. சுத்தமான குடிநீரா?
கடந்த மூன்று நாட்களாக, இங்கு பம்பிங் செய்யப்படும் தண்ணீர் மஞ்சள் நிறமாக உள்ளது. இந்த தண்ணீர் ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் மஞ்சள் நிறமாக வந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஊராட்சி அலுவலர்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர், இளநிலை பொறியாளர், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா ஆகியோர் மூளையூரில் உள்ள, ஆறு ஊராட்சிகளின் குடிநீர் நீரேற்று நிலையத்தையும், சம்பரவள்ளி அருகே சத்தியமங்கலம் சாலையில், கோவில் மேட்டில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு செய்தனர். இரு இடங்களிலும் தண்ணீரை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்தனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊராட்சி செயலர்களிடம் குடிநீர் சுத்தமாக வருகிறது என கூறியுள்ளனர்.
கண்டறிய வேண்டும்!
பொதுமக்கள் கூறியதாவது: கடந்த இரண்டு வாரங்களாக மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதியில் பவானி ஆற்றில் தண்ணீர் கருப்பாகவும், மஞ்சளாகவும் நிறம் மாறி வருகிறது. இந்த நிற மாற்றத்துக்கு காரணம் என்ன என்பது புதிராக உள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும்? இதற்கு தீர்வு என்ன என, குடிநீர் வடிகால் வாரியமும், மாவட்ட நிர்வாகமும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. பவானி ஆற்றில் தண்ணீர் எதனால் மாசு அடைகிறது. கழிவுநீர் எங்கெங்கெல்லாம் ஆற்றில் கலக்கிறது, என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலம் துவங்கியதை அடுத்து, ஆற்றில் நீர் வரத்து குறைந்து காணப்படும். குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆற்றில் சிறிதளவு வரும் தண்ணீர், சுத்தமான தண்ணீராக இருக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.