அரசு பஸ் பயண அட்டையில் நிபந்தனை; போலீசாரிடையே குழப்பம்
பொள்ளாச்சி; அரசு பஸ்களில், குற்றவாளிகளை அழைத்துச் செல்லுதல், பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார், முதலில் வாரண்ட் கொடுத்து பயணம் செய்து வந்தனர். இந்நிலையில், போலீசாருக்கு அரசு பஸ்களில் பயணம் செய்ய பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. அதில், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.பயண அட்டை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் செல்லுபடியாகும். குறிப்பிட்டுள்ள வருவாய் மாவட்டத்துக்குள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பயண அட்டையை, நடத்துனரோ அல்லது பரிசோதகரோ சோதனைக்காக கேட்டால் காண்பிக்க வேண்டும். காண்பிக்க தவறினால் நடைமுறையில் உள்ள சட்டப்படி அபராத தொகை உரியவரிடம் வசூலிக்கப்படும். இருக்கை பெறும் உரிமையை உறுதி செய்ய இயலாது உள்ளிட்ட நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.போலீசார் கூறியதாவது:இருக்கை இது தான் வேண்டும் என கேட்பதில்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதில் அமர்ந்து பயணிப்போம். இது போன்ற நிபந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.மேலும், இலவச பஸ் பயண அட்டை எனக் கூறினாலும், 200 ரூபாய் மாதம் வசூலிக்கப்படுவதாக வாய்மொழியாக அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் பரவுகின்றன. மேலும், ஏ.சி., மற்றும் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் தவிர்த்து, மற்ற பஸ்களில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர, புறநகர் பஸ்களில் மட்டுமே செல்ல வேண்டுமென்றால், கோவைக்கு பெரும்பாலான விரைவு பஸ்கள் தான் செல்கின்றன. இதனால், புறநகர் பஸ் வரும் வரை காத்திருந்து செல்லும் போது, சரியான நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.மாவட்டத்துக்குள் பஸ் பாஸ் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, ஒரு மண்டலத்தை சேர்ந்த பஸ், வேறு மாவட்டங்களுக்கு சென்றாலும் பயணிக்க அனுமதித்தால் பயனாக இருக்கும். அரசு போக்குவரத்து பயண அட்டையில் உள்ள குழப்பங்களை நீக்கவும், மாற்றங்களை செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தால், பயனாக இருக்கும்.இவ்வாறு, கூறினர்.