உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் செய்தி எதிரொலி தொண்டாமுத்துார் வட்டாரத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு

தினமலர் செய்தி எதிரொலி தொண்டாமுத்துார் வட்டாரத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு

தொண்டாமுத்தூர்;தினமலர் செய்தி எதிரொலியாக, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மண் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில், கனிமவளத்துறையினர் ஆய்வு செய்தனர்.கோவை மாவட்டத்தின், மேற்கு புறநகரான தொண்டாமுத்தூர் வட்டார பகுதி, மூன்று புறங்களும் மேற்கு தொடர்ச்சி மலையை அரனாக கொண்ட இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. இப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தையொட்டி உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில், அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுத்து வந்தனர். இதனால், இயற்கை வளம் கொள்ளையடிக்கப்பட்டு, அரசிற்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுவதோடு, வனவிலங்குகளும், வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுவது தொடர்ந்து வந்தது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மூங்கில் மடை குட்டை, மூலக்காடு, வெள்ளருக்கம்பாளையம், வெள்ளிமலைபட்டிணம் ஆகிய பகுதிகளில், அனுமதியின்றி பட்டா நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில், மண்வெட்டி எடுத்து, டிப்பர் லாரிகள் மூலம் கொள்ளையடித்து வந்தனர். இதுகுறித்து, நேற்று முன்தினம் நமது நாளிதழில் படத்துடன் செய்து வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், அதிக அளவு மண் கொள்ளை நடந்த வெள்ளருக்கம்பாளையம் மற்றும் மூங்கில்மடை குட்டை, மூலக்காட்டில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின் அறிக்கை, கலெக்டருக்கு தாக்கல் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !