| ADDED : ஜூலை 16, 2024 11:30 PM
வால்பாறை:வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் நிலையில், விடுதி வசதி இல்லாததால் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில், பி.காம்., பி.காம் (கம்யூட்டர் அப்ளிகேஷன்), பி.பி.ஏ., பி.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.சி.ஏ., பி.ஏ., (தமிழ்), பி.ஏ., (ஆங்கிலம்) உள்ளிட்ட 9 பாடப்பிரிவுகளுக்கு, முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு கடந்த மாதம் முதல் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.தற்போது நேரடி சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள, 520 சீட்களில் நேற்று வரை, 183 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், விடுதி வசதி இல்லாததால் வெளியூர் மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்து படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ''வெளியூர் மாணவர்கள் அதிக அளவில் கல்லுாரியில் சேர விண்ணப்பித்துள்ளனர். விடுதி வசதி இல்லாததால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறையில் காட்சிப்பொருளாக உள்ள யாத்திரை நிவாஸ் கட்டடத்தை தற்காலிக விடுதியாக பயன்படுத்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார். யாத்திரை நிவாஸ் முறைப்படி கல்லுாரி வசம் ஒப்படைத்த பின், வெளியூரில் இருந்து வால்பாறை கல்லுாரியில் சேர்ந்துள்ள புதிய மாணவர்கள் அங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.