கோவை;வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தி.மு.க., தயாராக ஆரம்பித்து விட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கு வியூகம் அமைத்து பணிகளை துவக்க கட்சியினருக்கும், திட்டப் பணிகளில் முனைப்பு காட்டுவதற்கு அரசு துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி செய்து வந்தாலும், 2021 சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதனால், கோவை மாவட்ட பொறுப்பாளராக, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை நியமித்து, கட்சியினரை ஒழுங்குபடுத்தியது. கோவை மக்களை தி.மு.க., பக்கம் இழுக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களங்கி, மேயர் பதவியை கைப்பற்றியது. தற்போது லோக்சபா தேர்தலிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. கட்சியினருக்கு 'வார்னிங்'
இருந்தாலும் கடந்த முறை கோட்டை விட்டது போல் இல்லாமல், 2026ல் 10 தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்கிற 'டார்க்கெட்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையூறு செய்யும் வகையில் கட்சியினர் செயல்பட்டாலோ, ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பட்டாலோ அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை நேரடியாக சந்தித்து, அரசின் சாதனைகளை சொல்லி, தி.மு.க., பக்கம் இழுக்க வேண்டுமென்கிற அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப திட்டப் பணிகளை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வேகமெடுக்கும் திட்டங்கள்
கோவையை பொறுத்தவரை மிக முக்கியமாக செம்மொழி பூங்கா, மேற்குப்புறவழிச்சாலை உருவாக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது; லோக்சபா தேர்தலில் உறுதியளித்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கலைஞர் நுாலகம் கட்டும் பணிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டு, முழுமையாக முடிக்காமல் முடக்கி வைக்கப்பட்டிருந்த சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்க மாநகராட்சி முழு முயற்சி எடுத்து வருகிறது. இதுபோக, புதிய வடிவமைப்புடன் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் உருவாக்க, 20 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது.'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கு கடனுதவி பெறுவதற்கான பூர்வாங்க ஆய்வு பணி நடந்திருக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி இம்மாத இறுதிக்குள் முடிய இருக்கிறது. நிபந்தனையின்றி, 99 ஆண்டு குத்தகைக்கு நிலத்தை வழங்குவதற்கு உறுதியளித்து தமிழக அரசு கடிதம் வழங்கியிருக்கிறது.தற்சமயம் மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாகச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியை பெற்று துரிதகதியில் செயல்படுத்த உயரதிகாரிகள் மூலமாக முனைப்பு காட்டப்படுகிறது. இவையெல்லாம், 2026 தேர்தலை குறிவைத்தே செய்யப்படுகின்றன.
களையெடுப்பது எப்போது?
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., இப்போதிருந்தே தயாராகி வருகிறது. மக்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்களே வெற்றியை தேடித் தரும் என முதல்வர் அபாரமாக நம்புகிறார். அதேநேரம் மக்கள் மன்றத்தில் ஆட்சிக்கு கட்சியினரால் அவப்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார். இதற்கு கட்சிக்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.லோக்சபா தொகுதியில் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளில் அதிகமான பூத்களில் பா.ஜ., முதலிடம் பெற்றிருந்தது. சில பூத்களில் தி.மு.க., மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டு இருந்தது. அதனால், உள்ளடி வேலை செய்தவர்கள் மீது தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தொண்டர்கள் விரும்புகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.