தமிழ் மொழிப்பாடத்தில் சிறக்க வேண்டுமா?
தாய் மொழியான தமிழ்ப் பாடங்களையே வாசிக்க முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பொதுத்தேர்வுகளில் ஆங்கில மொழிப்பாடத்தைக் காட்டிலும், தமிழ் மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் சமீபகாலமாக நடக்கிறது.மாணவர்கள் மொழி அறிவு பெற முதல் வகுப்பு முதல் மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இலக்கணத்துடன் கற்றுத் தந்தால் மட்டுமே மாணவர்கள் மொழி அறிவில் சிறப்படைவார்கள்.ஆங்கிலத்தில் பாடங்கள் முழுவதும் கற்பிக்கப்படுகின்றன. அதே நிலையில் தாய்மொழியில் மாணவர்கள் பாடம் கற்பிக்காத காரணத்தினால் தடுமாற்றம் அடைகின்றனர். பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களால் தமிழ் பாடத்தை வாசிக்க, எழுத முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுவதும் இதனால்தான். மொழி ஆசிரியர் தேவை
மாணவர்கள் முதல் வகுப்பில் பாடம் கற்பிக்க துவங்கும் போதே மொழி ஆசிரியர்கள் மூலம், இலக்கணத்துடன், உச்சரிக்கும் விதத்துடன் மொழிக்கல்வியை கற்பிக்க வேண்டும். அப்போது தான் மொழிக்கல்வியில் மாணவர்கள் சிறப்படைய முடியும். வெளி நாடுகளில் முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு மொழி ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கின்றனர். மாணவர்கள் மொழியை சிறப்பாக கற்றுக்கொள்கின்றனர், என்ற கருத்து சமீபகாலமாக முன்வைக்கப்படுகிறது.தமிழாசிரியர்கள் கூறுகையில், ''தமிழ் மொழியில் மாணவர்கள் தடுமாறுவதற்குக் காரணம், சிறு வயதில் இருந்து அவர்களுக்கு மொழிப்பாடத்தை, இலக்கணம், உச்சரிப்புடன் கற்றுக்கொடுக்காததுதான். முதல் வகுப்பு முதல் மொழிப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும், வெளி நாடுகளில் இதனை பின்பற்றுகின்றனர். அதன் மூலம் மொழி வளர்ச்சி பெறுகிறது. இதனை விடுத்து அரசு எந்த ஒரு திட்டத்தினை தீட்டினாலும், மொழிப்பாடத்தில் மாணவர்கள் சிறப்படைய முடியாது.பள்ளிக்கல்வித்துறை, ஆரம்ப வகுப்பு முதல் மொழி ஆசிரியர்கள் நியமித்து, மாணவர்களுக்கு மொழி அறிவினை ஏற்படுத்த வேண்டும்,'' என்றனர்.