மேலும் செய்திகள்
குறைகள் தீரும்; நம்பிக்கை குறையாத மக்கள்
20-Aug-2024
மேட்டுப்பாளையம் : பள்ளித் தேவைகளுக்காக மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்,கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பெத்திக்குட்டை முதல் தெற்கு கரடு வரை 2 கி.மீ., தூரத்துக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் செலவில் சாலை போடப்பட்டது. அதை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்கள் கலெக்டரிடம், இச்சாலையால் தான் தற்போது விளைப்பொருட்களை மார்க்கெட்டிற்கு சிரமம் இல்லாமல் எடுத்துச் செல்லமுடிகிறது. மழை காலங்களில் மிகவும் அவதியடைந்தோம். தற்போது இந்த நிலை மாறி உள்ளது, என நன்றி தெரிவித்தனர்.பின் பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட வெண்மணி நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 31 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. அதே போல் மொங்கம்பாளையம் பகுதியில் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில் 27 வீடுகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட கலெக்டர், பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதில் பயன் அடைந்த பயனாளிகள், எங்களது மனம் நிறைந்துள்ளது. வீடுகள் இன்றி தவித்து வந்தோம். வீடுகள் கிடைத்ததால் எங்கள் கனவு நிறைவேறி உள்ளது, என்றனர்.ஆய்வுகளுக்கு பின் கலெக்டர் கிராந்திகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும். அதிகாரிகளிடம் மனுக்கள் மீதான தீர்வுகள் தொடர்பாக ரேட்டிங்கின் அடிப்படையில் விளக்கம் கேட்கப்படுகிறது. மாவட்ட அளவில் பள்ளி பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு காண்கிறோம். மாநில அளவிலான தீர்வுகளுக்கு பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை எடுக்கிறது. அதே போல் நம்ம ஊரு, நம்ம பள்ளி என்ற அமைப்பை தொடங்கி உள்ளோம். அதில் ஆன்லைன் வாயிலாக பள்ளிகளுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து தெரிவிக்கலாம். பள்ளி தொடர்பான தேவைகளுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படக் கூடாது, என்பதற்காக இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம். ஆன்லைன் வாயிலாகவே உதவிகள் கிடைத்துவிடும். கிராவல் மண் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். யார் கடத்தினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.--
20-Aug-2024