அகங்காரம், ஆசைகளுக்கு இடம் அளிக்க வேண்டாம்
கோவை;ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ராம் நகர், ராமர் கோவில் அரங்கில் நேற்று மாலை நடந்தது. ஆன்மிக பேச்சாளர் ஸ்ரீ கிருஷ்ணா பேசுகையில், ''மதம் என்பது வெறித்தனமானது அல்ல. மனதை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுவதுதான் மதம். மனதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.மனதில் தோன்றும் அகங்காரம், அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும். குரு உபதேசம் செய்வதன் வாயிலாக, மனதை துாய்மைப்படுத்திக்கொள்ள முடியும். மனதின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்துக்கொண்டு இருந்தால், மனம் துாய்மையாக இருக்காது.மாறாக, அகங்காரம், ஆசைகளுக்கு பதில் அளிக்காமல் கவனித்துக்கொண்டு மட்டும் இருந்தாலே போதும். அவை எழுந்த இடத்திற்கே திரும்பி சென்றுவிடும்,'' என்றார்.