எலக்ட்ரிக் பைக் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை; கிலோ மீட்டர் குறைவாக கிடைத்ததால், எலக்ட்ரிக் பைக் நிறுவனம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, பீளமேடு, விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்த விஜயன் என்பவர், ஓஜோ டெக் ஆட்டோமொபைல் நிறுவனத்திடமிருந்து, 1.25 லட்சம் ரூபாய் செலுத்தி எலக்ட்ரிக் பைக் வாங்கினார். பைக் வாங்கி இயக்கிய நாளில் இருந்து, கிலோ மீட்டர் எண்ணை காட்டும் 'டிஸ்பிளே' மீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. அந்நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் பழுது நீக்கிய பிறகும், மைலேஜ் மிகவும் குறைவாக கிடைத்தது. எவ்வளவு கிலோ மீட்டர் கிடைக்கும் என்ற உத்தரவாதம் தருமாறு கேட்ட போது மறுத்து விட்டனர். கிலோ மீட்டர் மிக குறைவாக கிடைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட விஜயன், பைக் வாங்கியதற்கான தொகையை திருப்பி தருவதோடு, இழப்பீடு வழங்க கோரி கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ''எலக்ட்ரிக் பைக் உற்பத்தி நிறுவனம், மனுதாரருக்கு, 1.25 லட்சம் ரூபாயை திரும்ப கொடுப்பதோடு, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.